Friday, October 1, 2010

எந்திரன் - விஷுவல் விருந்து!!


காத்திருந்த நாட்கள் முடிந்து திரையைத் தொட்டுவிட்டது எந்திரன்! இது போன்ற ஒபனிங் இந்தப் படத்தில் பணி புரிந்த ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய் இவர்களுக்கு இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே. இது போல் இன்னொரு படம் தமிழில் வருமா என்பதும் கேள்விக் குறியே! எதிர்பார்ப்பைத் தோற்றுவிப்பதை விட அதைப் பூர்த்தி செய்வது அதை விட கடுமையான சவால். அதில் முழு வெற்றி பெற்றிருக்கிறான் எந்திரன்.


ஷங்கரின் எல்லா படத்திலும் கதை என்பது ஒரு நூலிழை அளவுதான் இருக்கும். அதை எப்படி காட்சிப்படுதுகிறார் என்பதில்தான் மலையளவு வேறுபட்டு வெல்கிறார். எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல என்றாலும், சொல்லப்பட்ட விஷயம் இந்திய சினிமாவுக்கே புதுசு என்பதால், எக்கச்சக்கமாக எல்லோர் பல்சும் எகிறுகிறது. "இது நடந்தா என்ன ஆகும்?" அப்படிங்கற ஒரு வரில எல்லா படத்தையும் வரையறைப் படுத்திடலாம். அந்த ஒரு வரி புதுசா, கவருகிற மாதிரி இருந்தாலே பாதி வெற்றிதான். இந்தப் படத்தில், "விஞ்ஞானி வசீகரன் உருவாக்கும் ரோபோ, அவருக்கே ஆப்பு வைக்க நினைத்தால் என்ன ஆகும்?" அப்படிங்கறதை முடிஞ்ச அளவுக்கு எளிமையா, அழகா, விறுவிறுப்பா, புதுசா புன்னகையோட சொல்ல வர்றான் எந்திரன்.

இவ்வளவு பெரிய படத்துக்கு வலுவான கதாபாத்திரங்களும் திரைக்கதையும் இல்லாவிட்டால் அனைத்தும் "விழலுக்கு இறைத்த நீர்". ஷங்கர் மீண்டும் தான் ஒரு தேர்ந்த திரைக்கதை எழுத்தாளர் என்பதை நிரூபித்திருக்கிறார் (வெகு சில காட்சிகளைத் தவிர). ஒரு சாமானியனுக்கு அதிகப்படியான டெக்னாலஜி வார்த்தைகளைப்  போட்டுக் குழப்புவதை தவிர, மற்றபடி அழகாகப் படிப்படியாக படத்தை நம் கண் முன் விரிக்கிறார். 'நிறைய பிரச்சனை இருந்தால் எதைத் தீர்ப்பது என்று தெரியாமல் திரைக்கதை தத்தளிக்கும்' என்பது அடிப்படை விதி. அதே சமயம், ஒன்று இருந்தாலும் சில சமயங்களில் போர் அடித்து விடும். ஆனால் ஒரே ஒரு ஆதாரமான பிரச்சனையை  வைத்துக் கொண்டு மூன்று மணி நேரம் கத்தி மேல் நடந்து இலக்கை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது. அதற்கு பக்கபலமாக மூன்று காரணங்கள் சொல்லலாம். 1. ரஜினி 2. ரஜினி 3. ரஜினி.

இந்த வயதிலும், அவரின் அர்ப்பணிப்பு, எந்த ஒரு காட்சியையும் அனாயாசமாக அதனுடைய உச்சத்துக்கு உயர்த்தும் திறமை, அந்த் திறமையை கையாளும் லாவகம், காமெடியிலும் வில்லத்தனத்திலும் மிஸ் ஆகாத டைமிங் சென்ஸ் என ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவரின் உழைப்பு காட்சியின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது. அவரின் வழக்கமான மசாலாவில் இருந்து விடுபட்டு நடித்ததற்க்கே அவருக்கு, அவர் உயரத்திற்கு ஒரு பூச்செண்டு கொடுக்கலாம். வசீகரன், ரோபோவை கண்டுபிடித்து ஐஸ்சை வெளிநாடு சென்று கட்டிப்பிடித்து பாடிவிட்டு அவரைத் தவிர அனைவரிடமும் அடி வாங்கி கிளைமாக்ஸ்ஸில் மட்டும் போனால் போகிறது என ஏதோ உருப்படியாக செய்கிறார். உண்மையிலே படத்தின் ஹீரோ கண்டிப்பாகச் சிட்டி என்னும் ரோபோ ரஜினிதான். முழுப் படமும் சிட்டியின் ராஜாங்கம்தான். போலீசிடம் நக்கல், மாரியம்மன் தரிசனம், குழந்தையின் பிரசவம், ட்ரெயின் பைட், இயந்திரக் காதல், ஐஸ்ஸுடன் நடனம்  என கிடைத்த பால் எல்லாம் சிக்சுக்கு பறக்கிறது. பஞ்ச் டையலாக் தவிர ரஜினியின் அனைத்து திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் ஷங்கர். இரண்டாம் பாதியில் பரிமாணம் மாறும் போது ரஜினியின் உள்ளே இருக்கும்  இயல்பான வில்லன் சடாரென டாப் கியரில் நம்மை இழுத்துச் செல்கிறது. எத்தனை நாள் ஆச்சு இப்படி ஒரு ரஜினியைப் பார்த்து? குழந்தைகள் முதல் கிழவன் வரை அனைவரையும் கவருவான் சிட்டி.

இயந்திரத்திற்குக் காதல் வர வேண்டும் என்றால் கண்டிப்பாக அது ஒரு உலக அழகியாக இருக்க வேண்டும் என்பது ரஜினியின் பேரனுக்கே தெரியும். ஐஸ்வர்யா ராயைத் தவிர இந்த பாத்திரத்தில் வேறு யாரம் இவ்வளவு பாந்தமாக பொருந்தி இருக்க முடியாது. சில க்ளோஸ் அப் ஷாட்ஸ் தவிர இன்னும் அழகாகவே இருக்கிறார். அவருடைய நடனத்தின் நளினம், நமக்கு மெய்சிலிர்ப்பு. அவ்வளவு இயல்பாக ஏதோ வெந்நீர் சுட வைப்பது போல சுலபமாக ஆடிச் செல்கிறார். (ரஜினி அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்). ராவணனை ஒப்பிடும் போது இதில் இன்னும் அழகாகத் தமிழையும் நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிட்டி,  வசீகரனைக் கண்டுபிடிக்கும் காட்சி ஐஸின் நடிப்புக்கு 'பானை சோறு பதம்'.

இவ்வளவு பெரிய சயன்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கு நிச்சயம் அனிமட்ரானிக்ஸ், லைட் அண்ட் மாஜிக் போன்ற ஹாலிவுட் நிறுவனங்கள், பலமான அடித்தளம். படத்தின் முழுத் தரமும் இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. படம் நெடுக ஒரு இடம் விடாமல் மிரட்டி இருக்கிறார்கள். அதுவும் அந்தக் கடைசி 30 நிமிடத் திருப்பங்களும் கிளைமாக்ஸ் காட்சிகளும் நம் கண்களைத் திரையை விட்டு அகல விடுவதில்லை. இரண்டு ரஜினி வரும் எல்லா இடங்களாகட்டும், 1000 ரஜினி வரும் அரிமாவாகட்டும், எதிலும் துளிக் கூட கிராபிக்ஸ் என்பது கண்டுபிடிக்க முடியாத படி சிறப்பாக இருக்கிறது. இதற்காவே 'கொசுக் கார்ட்டூன்களையும்', கார் சேசிங்கில் சில ஓட்டைகளையும் மன்னிக்கலாம்.

சுஜாதா அவர்களின் கடைசிப் படம். சுஜாதா சில வருடங்கள் முன்பு கூறி இருந்தார் "தமிழ் சினிமாவில், நாட்கள் தள்ளிப் போனாலும் இரண்டு படங்கள் நிச்சயம் ஒரு நாள் எடுக்கப்படும். ஒன்று 'பொன்னியின் செல்வன்' இன்னொன்று 'ரோபோ' ". ஷங்கரும் கார்க்கியும் சொதப்பி இருந்தாலும் ஆங்காங்கே சுஜாதாவின் ஒரு வரி வைரங்கள் மின்னத் தவறவில்லை. உதாரணம் "கடவுள் இருக்கிறாரா?" என்கிற கேள்வி. ரோபோவிடம் மக்கள் கேட்கும் கேள்விகளை பாமரனுக்கும் புரிவது போல எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்திருக்கலாம். படத்தின் ஆதார ஐடியா சுஜாதாவினுடையது. ஆனால் அவருக்கு உரிய மரியாதை செய்ய ஷங்கர் தவறி விட்டார். டைட்டில் போடும் முன்பு ஒரு நன்றி அஞ்சலி தெரிவித்திருக்கலாம்.

கருணாசும் சந்தானமும் காமடி பண்ணும் போது யாரையாவது தியேட்டருக்கு அனுப்பி 'கிச்சு கிச்சு' மூட்டச் சொல்லலாம். சிட்டி, மொத்தச் சிரிப்புகும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள, இவர்கள் இருவரும் அதற்குத் தண்டனையாக சிட்டியிடமே செருப்படி வாங்குகிறார்கள்.

'இரும்பிலே ஒரு இதயம்' தவிர அனைத்துப் பாடல்களும் ஷங்கரின் பிரம்மாண்டத்தையும், புதிய இடங்களையும், ஐஸ்-ரஜினியின் அழகையும் அள்ளி வந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதுவும் 'காதல் அணுக்கள்' பாடல், தென்றலோடு வரும் ஐஸ்க்ரீம்.

ரஹ்மானின் பாடல்கள் பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. ஏற்கனவே அது உயரம் தொட்டு விட்டது. அவரின் பின்னணி இசை புதிய சிகரத்தை தொட்டிருக்கிறது. காட்சியும் இசையும்  ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு முந்துகிறது. கார் சேசிங்கில் வரும் இசையின்  புதிய ஸ்டைல், கிளை மாக்ஸ் சிம்பொனி என நமக்கு புதிய இசை அனுபவம். இன்னொரு முறை பார்க்கும் போதுதான் அதன் முழு வீரியமும் புரியும் என நினைக்கிறேன்.

ரத்னவேலு, சாபு சிரில், ஆண்டனி என அனைவரின் பங்களிப்பும் அபாரமானது.

படத்தில் எனக்குத் தெரிந்த சில சறுக்கல்களும் இருக்கின்றன.

1. முதல் பெரிய ஓட்டை: வில்லன். டானி டென்க்சாங்பா அட்சரம் சுத்தமாக ஹிந்தியில் பேசி இருக்கிறார். உதட்டசைவில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வார்த்தை கூட தமிழோடு பொருந்தி வரவில்லை. இதனாலேயே இவர் மனதில் ஓட்ட மறுக்கிறார். தமிழுக்கு மட்டுமாவது யாரவது நல்ல தமிழ் தெரிஞ்ச பெரிய நடிகரை உபயோகப் படுத்தி இருக்கலாம். ஷங்கரின் வழக்கமான perfectionக்கு ஒரு பேரிடி. எப்படி கோட்டை விட்டார் எனத் தெரிய வில்லை!! {தமிழுக்கு சத்யராஜ் இருந்திருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும்!!}
2. சாமானியனைச் சுற்றி விடும் அதிகப்படியான ஆங்கில டெக்னாலஜி வார்த்தைகள் (IP address, Worming-Deworming). இயன்றவரை தமிழ் படுத்தி இருக்கலாம். இல்லை புரியும் படி சிறிது மாற்றி எடுத்திருக்கலாம்.
3. இரண்டாம் பாதியின் முதல் 15 நிமிடங்கள். கொசுவும் கலாபவன் மணியும் வந்து மொக்கை போடுகிறார்கள். சாப்பிட்ட முந்திரிப்பருப்புக்கும் சிக்கன் வறுவலுக்குமாவது கொஞ்சம் ஷங்கர் யோசித்திருக்கலாம்.
4. வில்லன் ரஜினியின் காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.
5. விஞ்ஞானி ரஜினியின் மேக்கப்பில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஒட்டு தாடியும் மீசையும் திரையை நெருடுகிறது.

இவை எல்லாம் சிறிய விஷயங்களே. இவை அனைத்தையும் மறக்கும் அளவிற்கு படம் ஜோராய் நம்மை ஆட்கொள்கிறது.
எந்திரன், main stream ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் இருக்கலாம். ஆனால் மற்ற அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும் என எண்ணுகிறேன்.

எந்திரன் அனைவரையும் ஈர்க்கும் மந்திரன்! DONT MISS IT!

Wednesday, August 4, 2010

எந்திரன் - ஒரு இசைப் பார்வை


இப்படி ஒரு ஒரு மாஸ் இசை கேட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டது! இதோ வந்துவிட்டான் எந்திரன்! ராவணனில் ஏமாற்றம் அளித்த ரஹ்மான்-வைரமுத்து கூட்டணி, இம்முறை ரவுண்டு கட்டி கதகளி ஆடி இருக்கிறது. கூட சேர்ந்து வைரமுத்துவின் மகனும் (கார்க்கி), பா. விஜயும் பட்டாசு வெடித்திருக்கிறார்கள். ஷங்கர் படங்களில் என்றும் பாடல்கள் சோடை போவதில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் எந்திரன். "IF YOU HAVE HIGH EXPECTATIONS...MAKE IT SIMPLE" அப்படிங்கறது இந்த ஆல்பத்துக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். நிறைய மெனக்கெட்டு நிறைவாக கொடுத்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன். என்னதான் "ஹார்டு டிஸ்க், சிலிகான்" என்று ஆங்கிலத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஜல்லியை அடித்திருந்தாலும் தமிழில் உள்ள அறிவியல் வார்த்தைகளையும் பயன்படுத்தி இருப்பது  வரவேற்கத்தக்கது. இது போன்று மிகுந்த பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் உள்ளாகும் ஆல்பங்கள் பல கொசுவர்த்தி சுருள் போல வந்த வேகத்திலேயே சுருண்டிருக்கிறது. ஆனால் எந்திரன் வானளாவப் பறக்கிறான்...மேலும் பறப்பான்.

(எனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு கடைநிலை இசை ரசிகனின் பார்வையில் இருந்தே இதை எழுதுகிறேன். என் ரசனைக்கு கொஞ்சம் முரண் இருக்கலாம்)

புதிய மனிதா - SPB, Rahman, Katheeja Rahman - வைரமுத்து


ஒரு ரோபோ உருவாக்கத்தின் கடைசி கட்டப் பணிகளின் போது இப்பாடல் ஆரம்பிக்கும் போல உள்ளது. மெதுவாகக் குறைந்த இசையோடு ரஹ்மானின் சின்தசைஸ் குரலில் அறிமுகமாகிறது பாடல். கதீஜாவின் குரல் சில நொடிகளுக்கு பிறகு ஆரம்பித்து கவர்கிறது. மேலும் நம் பொறுமையை சோதிக்காமல் எஸ்பிபி வந்து பாடலைத் தடதடக்க வைக்கிறார். அவரின் குரல் உண்மையிலேய அவருக்கு இறைவன் கொடுத்த வரம். சில வரிகள் பாடினாலும் வெளுத்து வாங்குகிறார்
எஸ்பிபி. வைரமுத்து, "இப்படிப்பட்ட அறிவியல் பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறை" என்று கூறி இருந்தார். உண்மையே. இந்தப் படத்தில் அவர் எழுதியிருக்கும் எல்லாப் பாடல்களுக்கும் நிறைய உழைத்திருக்கிறார். தலைவர் சுஜாதா இருந்திருந்தால் இன்னும் நிறைய டிப்ஸ் கொடுத்திருப்பார். இந்தப் பாடலில் "தந்தை மொழி, கர்த்தா" என்கிற பதங்கள் கவர்கிறது.  ஒரு ஓபனிங் பாடலுக்கு இருக்கக் கூடிய அந்த ஒரு பஞ்ச் குறைகிறது. இருப்பினும் வசீகரமான முதல் பாடல்.

பூம் பூம் ரோபோ - Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah - கார்க்கி

வழக்கமான ராப்பில் அதிர்ந்து ஆரம்பிக்கும் பாடல். பழக்கமான "ஒரே மெட்டு" யோகி B யின் வார்த்தைகளில் கொஞ்சம் கம்பீரம் இழந்து, நடுவில் தடம் மாறி ஆங்காங்கே கலக்குகிறது. நடுவில் வரும் "சுட்டி சுட்டி ரோபோ"வில்  ஏற்கனவே கேட்ட சாயல். ஷங்கர் காட்சிகளில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

கிளிமஞ்சாரோ - Javed Ali, Chinmayi - பா. விஜய்

முதல் "PICK OF THE ALBUM". பழங்குடியினரின் மெட்டை அடிப்படையாக வைத்து இசை அமைத்திருக்கிறார் புயல். இருப்பினும் புதிய கள்ளாக இனிக்கிறது. இதுவே படத்தில் கடைசி டூயட் போல இருக்கிறது. கேட்டவுடன் மனதில் ஒட்டிக் கொள்கிறது பாடல். சில இடங்களில் எங்கோ கேட்ட பாடலை நினைவு படுத்தினாலும் இசையும் வார்த்தைகளும் அதை மறக்கச் செய்கின்றன. "அப்பப்போ...பின்னிகோடி" என்ற இடம் வரும்போதெல்லாம், பாடல் துள்ளல் நடை போடுகிறது. "ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா?" என்று வார்த்தைகளில் வலை வீசுகிறார் பா.விஜய். சின்மயியின் குழைவுக்கு முன் ஜாவேத் அலியின் குரல் சிறிது பின் தங்கியே ஒலிக்கிறது. ஜாவேத் அலிக்கு கொஞ்சம் "ழகர" ப் பயிற்சி கொடுத்திருக்கலாம் ரஹ்மான். பல இடங்களில் உச்சரிப்பில் தள்ளடுகிறார். சீக்கிரம் பல கவுண்ட் டவுனில் முதல் இடம் பெறப் போகும் பாடல்.


சிட்டி டான்ஸ் - Pradeep Vijay, Pravin Mani, Yogi B

படத்தின் கிட்டத்தட்ட தீம் பாடல் போல. நடுவில் பரதநாட்டிய ஸ்வரங்கள் வருகின்றன. சிட்டி ரோபோ எல்லா வகை நடனமும் ஆடுகிறது போல இருக்கிறது. முழுக்க ஸ்வரங்களாக இல்லாமல் அதை உடனே தடம் மாற்றி தீம் பீட் கொடுத்து மனதை அள்ளுகிறார். பார்க்கப்பட வேண்டிய பாடல்.

அரிமா அரிமா - Hariharan, Sadhana Sargam - வைரமுத்து

இரண்டாவது "PICK OF THE ALBUM" இது. ஒரு ஓபனிங் பாடலுக்கு இருக்க வேண்டிய பஞ்ச் இந்தப் பாடலில் இருக்கிறது. மகாராஜாவுக்குக் கட்டியம் கூறி வரவேற்பது போலத் தொடங்கும் பாடல், டூயட்டாகவும் மிளிர்வது ஆச்சர்யம். ட்ரம்ஸுடன் கோரஸ் "இவன் பெயரை..." என ஆரம்பிக்கும் போது., பாடலின் மாஸ் உங்களுக்குப் புரியும். இயந்திரம் காதல் செய்வது போல இருப்பதாலோ என்னவோ ஹரிஹரன் கொஞ்சம் கடுமையாகவே மிரட்டி இருக்கிறார். "அஃறிணையின் அரசன், காமுற்ற கணினி, சிலிகான் சிங்கம்" போன்ற புதிய வார்த்தைகள் வைரமுத்துவிற்கு "அட" போட வைக்கின்றன. Watch out for this song!

இரும்பிலே ஒரு இதயம் - A R Rahman, Kash 'N' Krissy - கார்க்கி

ராப்பில் ஜப்பானிய வார்த்தைகளுடன் (Arigatho Gozaimas - நன்றி என்று அர்த்தம்!) ஆரம்பிக்கும் பாடல் எடுத்தவுடனேயே டாப் கியரில் பறக்கிறது. பாடலின் டெம்போ எங்கும் குறைவது இல்லை. நடுவில் வரும் ஆங்கில ராப்..வழக்கமான ஒன்றே. சிறிது நேரமே வருவதால் தப்பிக்கிறது. பாடலின் உயிரோட்டம் ரஹ்மானின் குரலில் இருக்கிறது. ஷங்கர் மீதியை காட்சிகளில் நிரப்புவார் என்று எதிர்பார்கிறேன்.

காதல் அணுக்கள் - Vijay Prakash, Shreya Ghoshal - வைரமுத்து


மூன்றாவது "PICK OF THE ALBUM". இந்தப் பாடல் சில முறை கேட்ட பின்பே பிடிக்கும். "Lukka Chuppi" போல ஆரம்பிப்பதாகத்  தோன்றும் போதே...வேறு திசையில் இட்டுச் செல்கிறார் ரஹ்மான். விஜய் பிரகாஷ் என்பவர் ஆண் குரல். ஒரு அலட்சியம் கலந்த வசீகரம் இருக்கிறது இவர் குரலில். அதுவும் "oh..baby" பிட் வரும் போது இந்தப் பாடல் முழுமைத் தன்மையை அடைகிறது. என்றும் மெலடி பாடல்களே மனதிலும் காலத்திலும் நிற்கும். இந்தப் பாடலும் மக்கள் மனதில்  என்றும் நிற்கும்.


எங்கேயாவது சில இடங்களில் கொஞ்சம் நெருடினாலும், முழுமையாகப் பார்க்கும் போது வெற்றிக் கொ(கோ)டியை எட்டி விட்டார்கள். "ANOTHER FEATHER IN PUYAL'S CAP!"

Sunday, June 27, 2010

நவீன ராமாயணம் (ராவணன்)


மணிரத்னம் ஆய்தஎழுத்துக்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஒரு வீட்டுக்கு இரு வாசல் வைத்து விற்க முயன்றிருக்கிறார். வழக்கமான சமீப கால மணிரத்னம் படங்கள் போல நமக்கு கால்வாசி குழப்பம், கால்வாசி பிரமிப்பு, பாதி ஏமாற்றம் எனக் கலந்துகட்டி, பாவக்காய் ஃப்ரை போல பார்க்க அழகாக, ஆனால் சுவைத்தால் கசப்பாக இருக்கிறது. படத்தின் ஒன் லைன் "ராமாயணத்தில் ராவணன் ஹீரோவாக இருந்தால் என்ன ஆகும்?" அவனவன் ரூம் போட்டு கதையை யோசித்துக் கொண்டிருக்க மணி கதையை எளிதாக ராமாயணத்தில் இருந்து 'லபக்'க்கி இருக்கிறார், கதாபாத்திரங்கள் தொடங்கி. இந்தியாவின் தலை சிறந்த டைரக்டர்களுள் ஒருவர் என சொல்லப்படும் மணிரத்னத்திடமிருந்து இது வருவதை ஒரு ரசிகனாக ஜீரணிக்க முடியவில்லை.

ராமன் - ப்ருத்விராஜ்
சீதா - ஐஸ்வர்யா ராய்
ராவணன் - விக்ரம்
அனுமார் - கார்த்திக்
விபீஷணன் - முன்னா
கும்பகர்ணன் - பிரபு (என்ன ஒரு தோற்ற ஒற்றுமை!)
சூர்ப்பனகை - ப்ரியா மணி
லட்சுமணன் - ஜான் விஜய் (கொஞ்சம் கொஞ்சம்)

தங்கையின் தற்கொலை மற்றும் கற்பழிப்புக்கு பழி வாங்க சீதையை களவாண்டு வருகிறார் ராவணண். சீதையின் அழகில் மனம் தத்தளிப்பதில் அவரை கொல்லாமல் வாய்தா வாங்குகிறார். தேவ் ஆகிய ராமன் சீதையைத் தொடர்ந்து தேடி வருகிறார். ராவணன் அவருக்கு வழியில் பல ஃப்யூஸ் போன பல்புகளைக் கொடுத்து ராமனின் ஆள் பலத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் போதே சீதைக்கு தான் ஒரு நம்பியார் வேடத்தில் இருக்கும் எம்ஜியார் என்றும் அவள் கணவன் ராமனும் சில நேரங்களில் நம்பியாராக இருந்ததை சுட்டி(க்) கதை சொல்கிறார். சீதை ராமனை நம்பியார் என ஏற்க மறுத்தாலும் ராவணனை மதித்து அவனுக்காகவும் கண்ணீர் உகுக்கிறாள். இதனால் ராமனை எச்சரித்து சீதையை விடுவிக்கிறான் ராவணன். கற்பை உரசிய ராமனுக்கு தண்டனை தராமல் கடைசியில் சீதை என்ன செய்கிறாள்? என்பதை உலக சினிமாவுக்கே தெரியாமல் போன ஒரு புதிய கிளைமாக்ஸில் இயக்குனர் சொல்கிறார். இரண்டு மொழிகளின் மக்களையும் திருப்திப் படுத்த நினைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை, இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் நடுவில் தள்ளாடுகிறது.

ராவணனிடம் பரிதாபம் வந்து, ராமனை வில்லனாக மக்கள் மனதில் சித்தரிக்க முயன்றிருக்கும் மணிரத்னத்துக்கு, சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் மட்டுமே உதவி இருக்கிறார்கள். இருவரும் இயற்கையை கடலாக படமெங்கும் அள்ளி இறைக்கிறார்கள்.  "எங்கே ஒளிந்திருந்தது இந்தியாவில் இத்தனை அழகும்?" எனக் கண்களும் மனமும் விரிகிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் தண்ணீர். நமக்கே ஜலதோஷம் பிடிக்கும் போல. மழை தூறலாக தூவிக் கொண்டே இருக்கிறது! காடுகளின் பனி கலந்த மேகமும், இயல்பான வெய்யில் கலந்த மழையிலும், அருவியின் சாரலிலும், ஐஸின் மேக்அப் இல்லா அழகிலும் (க்ளோசப்பில் கால் கிழவி), தொங்கு பாலக் கிளைமாக்ஸிலும் நம் மனம் மலையேறி ஆச்சர்யப்படுகிறது. சமீர் சந்தாவின் உழைப்பிலும் பிரமாண்டத்தின் மெனக்கெடல் தெரிகிறது. காட்டின் நடுவில் முளைக்கும் திடீர் பாழடைந்த அரண்மனைகள் கொஞ்சம் நெருடினாலும் அதன் நேர்த்தியும் இயல்பும் நம்மை ஈர்க்கிறது. டெக்னாலஜி ரீதியாக இந்தப் படம் சமீப காலத்தில் வந்தவற்றில் தனித்து, சிறந்து நிற்கிறது. இதற்காகவே மற்றதை மன்னிக்கலாம் என்ற பலமே படத்தை இரண்டு மணிநேரம் தாக்குப் பிடிக்க வைத்திருக்கிறது.

ராவணனின் உணர்ச்சிகளை நமக்குக் கடத்த முயலும் திரைக்கதை யுக்திகளில், மணிரத்னம் செமையாக அடி வாங்குகிறார். சுஹாசினியும் அவரை உருட்டு கட்டையால் (நம்மையும்தான்) போகிற போக்கில் நாலு சாத்து சாத்துகிறார். கதை மாந்தர்கள் முகத்தில்  அடர்த்தியாகவும், திட்டுத் திட்டாக நமது முகத்திலும் கரியைப் பூசுகிறார். இயற்கையின் தாக்கம் தவிர கதையின் உணர்ச்சி நம்மை உரசிக் கூடப் பார்ப்பது இல்லை. மக்கள் ஏன் விக்ரமை ஒரு தலைவனாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு சீன் கூட இல்லை.  காரணமே இல்லாமல் ஒரு கூட்டம் அவரைப் பின் தொடர்வதை ஏற்க முடியவில்லை. யூகிக்கக் கூடிய ஃப்ளாஷ்பேக், கண்டவுடன் காதல், தெளிவில்லாத விக்ரமின் பின்னணி, விக்ரம் போகும் இடம் எங்கும் நொடியில் திடீர் பாசறைகள், போலீஸ் கார்த்திக்கின் பின்னே வால் பிடிப்பது, குருவி சுடுவது போல மனிதர்களை சுடும் ப்ருத்விராஜ் & கூட்டணி என ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்/கிளிஷேக்கள்.

அடுத்த பலவீனம் வசனம் மற்றும்  அதன் உச்சரிப்பு. சுஜாதாவின் வெற்றிடம் படத்தில் பளிச் எனத் தெரிகிறது. உணர்ச்சிகளை நறுக் வார்த்தைகளில் வடிக்கும் ஜாலம் சுஹாசினிக்கு வர நிறைய வருடங்கள் பிடிக்கும். வசனங்களைச் சின்னதாக முணுமுணுத்தால் போதும் என நினைத்து  விட்டார் போல. வழக்கமாக மணிரத்னம் படத்தில் நெடுக ஆங்காங்கே தெரியும் இரண்டு வரி "நகைச்சுவை மின்னல்கள்" மிஸ்ஸிங். விக்ரமும் ஐஸ்வர்யாவும் அவரவரின் உணர்ச்சிகளை சொல்ல உடல் மொழியை மட்டும் வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு தடுமாறுகின்றனர் அல்லது இசையில் ஒளிந்து கொள்கிறார்கள். நேரடி தமிழ்ப் படமாக இருப்பினும், நமக்கு டப்பிங் படம் பார்த்த உணர்வே மிஞ்சுகிறது. ரீரெகார்டிங்கின் போது எல்லோரும் ஒரு பத்தடி தள்ளி நின்று பேசி இருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது.  என்ன பேசுகிறார்கள் என கண்டுபிடிப்போர்க்கு குலுக்கலில் திருட்டு விசிடி கொடுக்கலாம்.

விக்ரம், சொன்னதைத் திறமையாகச் செய்திருக்கிறார். தேவையானவற்றை அவரிடம் சொல்வதில்தான், மணி கோட்டை விட்டிருக்கிறார்.  கோபமும், விரக்தியும் சேர்த்து நம்மை உருட்டு விழிகளால் மிரட்டுகிறார்.  சில இடங்களில் மாவோயிஸ்ட்களை நினைவு படுத்துகிறார். ஆனால், அவர் "பக்பக்பக்"க்கும் போதும் "டண்டண்டண்"ணும் போதும் நமக்கு கொஞ்சம் தலை "நபநப"க்கிறது. பயம், பாசம், சஞ்சலம், தவிப்பு என ஐஸ்வர்யாவின் கண்கள் பேசும் மொழிகள் கோடி கோடி. டப்பிங் தவிர அவரின் உழைப்பு ஆச்சர்யம். முதுகு நிமிர வேலை வாங்கி இருக்கிறார்கள். ப்ருத்விராஜ் கோபமாக காட்டுக்குள் ஒரு என்கவுன்டர் பிக்னிக் போய் வருகிறார். பிரபு தனக்குக் கொடுத்த சப்ளையர் வேலையை நன்றாக பார்க்கிறார். கார்த்திக் சாதரணமாகப் பேசினாலே புரிவது சிரமம். ரஹ்மான் வேற இவர் பேசுவதை பாதி சாப்பிட்டு விடுகிறார். காமடி செய்ய முயற்சித்து மரங்களிலும் ஜீப்பிலும் நம் கழுத்திலும் தொங்குகிறார். ப்ரியாமணி, ரஞ்சிதா, வையாபுரி,  இன்னும் சில உபரிகள் கொசுறு போல வந்து போகின்றனர்.

பாடல் ஒளிப்பதிவில் கலக்கும் மணி இதில் கலங்கி இருக்கிறார். "உசுரே போகுதே" வில் நம் உசிர் கரைக்கிறார் ரஹ்மான். பின்னணியில் கொஞ்சம் சத்தமும் திகிலும் கலந்து மிரட்ட முயல்கிறார்.

பார்வைக்கு விருந்து பரிமாறி இருக்கும் மணி, மற்றவற்றில் சில இடங்களில்  பாதிக் கிணற்றிலும், பல இடங்களில் தலை குப்புற  பாதாளத்திலும்  விழுகிறார். கேமராமென்களுக்காக ஒரு முறை போய் வரலாம்.

Monday, May 10, 2010

கடவுள் - 1

                                                                        
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே யுலகு'

           விமர்சிக்கப் போகிறவரைப் பற்றியே வாழ்த்து பாடி ஆரம்பிக்கிறேன்!

          இவரைப் பற்றி எழுதணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. கடவுளைப் பற்றிய என் புரிதலையும் நிலையையும் சந்தேகத்தையும் அனுபவத்தையும் மற்றவர்கள் சொன்னது, கேட்டது, படித்தது, சரடு விட்டது என அனைத்தையும் ஒரு சின்ன தொடராக பதிவிடலம்னு நினைச்சேன். (யாரு படிக்கறாங்க?ஹி..ஹி..) சந்தேகத்தின் அடிவாரத்தில் இருக்கும்போதுதான் தேடலின் வேகம் இன்னும் அதிகமாகிறது. இதோ ஒரு சின்ன தேடல்.

அம்மாவுக்கு உடம்பு
குணமாக நோன்பிருந்து,
தேர்வில் பாஸ் ஆக
முடி காணிக்கை தர
நேர்ந்து கொண்டு,
தங்கைக்கு நல்ல வரன்
நிச்சயமாக கால்நடையாய்
மலை ஏற பிரார்த்தித்து,
காதலி காதல் சொன்னால்
நூற்றியெட்டு முறை வலம்
வருவதாய் வாக்களித்து,
வாழ்க்கை முழுதும்
தொடர்ந்து கொண்டிருக்கும்
வேண்டுதல்கள்,
ஒன்று விடாமல் அனைத்தும்
நிறைவேறினாலும்,
மனதில் நெருடும்
அந்தக் கேள்வி...
உண்மையிலேயே இருக்கிறாரா கடவுள்?!

          இது நான் எழுதிய கவிதை! (மன்னிச்சுட்டு மேல படிங்க:-) இந்த நிலை அல்லது கேள்வி, பகுத்தறிவுள்ள எல்லோருக்கும் வரும். நான் கண்மூடித்தனமாகக் கடவுளை நம்புகிறவர்களை இங்கு குறிப்பிடவில்லை. சில பேர் இந்த கவிதையை படித்துவிட்டு 'யார்ரா இவன்?' என்ற தோரணையில் பார்ப்பார்கள். அவர்களும் விமர்சனத்தில் இல்ல. நமக்கு புரியாத விஷயங்கள் இந்த உலகத்துல, நம்மள சுத்தி நடக்குதே, இதுல எதை நம்பறது? எதை விடறது? இதுக்கெல்லாம் யாரு காரணம்? கடவுளா? இல்லை அவருக்கும் அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்க முடியுமா? அப்படி இருந்தா எங்க இருக்கு? அது ஒரு சக்தியா இல்ல இல்ல பலவா? ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு சக்தி இருக்கா? இல்ல அப்படி ஒண்ணுமே இல்லையா? எது உண்மை போல் இருக்கும் பொய்? எது பொய்யாக நம்பப்படும் உண்மை? என்று எல்லா கேள்விகளையும் கேட்டுவிட்டு திரும்பவும் அடுத்த பிரதோஷதுக்கு கோவிலுக்கு போகிறவர்களைப் பற்றியே கூற வருகிறேன். நமக்கு ஏன் இந்த 'quandary' ஆன ஒரு நிலை?

          நம்மை மீறிய, நாம் வணங்கக்கூடிய ஒரு சக்தி இருக்கிறதென்று நம்பி கோவிலுக்கு போகிறோம். கோவிலுக்குள் இருக்கும் வரையில் பெரும்பாலும் கேள்விகள் வருவதில்லை. வெளியே வந்தவுடன் நிதர்சன உலகத்தில் நிலவும் ஏழ்மை, துன்பம், தீவிரவாதம், அரசியல் இவற்றை பார்க்கும் பொழுது, கொஞ்சம் நம்பிக்கை குறைகிறது. நாம் வேண்டிக் கொண்டு வந்தது அடுத்த நாள் அல்லது அந்த மாதத்திற்குள்  நடக்கவில்லை என்றால் கொஞ்சம் சந்தேகம் வருகிறது.
அடுத்த வாரம் எல்லாத்தையும் புரட்டிப் போடறாப்புல லாட்டரில பணம் வந்ததும் 'கடவுள் கண்ணத் தொரந்துட்டார்'னு ஜல்லி அடிக்கறது. இதை வெளியில் இருந்து பார்த்தால் நமக்குள்ளேயே ஒரு ஒழுங்கின்மை தெரியுது. முழுக்க நம்ப விடாம நம்ம பகுத்தறிவு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கு. ரெண்டையும் சமமா வைக்க முடியாம அல்லாடறோம். இதுல எது நிஜம்? எது பிம்பம்?

          சுஜாதாவின் 'கடவுள் இருக்கிறாரா?' என்ற புத்தகத்தின் முடிவில்  "கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று என்னைக் கேட்கிறீர்களா? It depends!" என்று முடித்திருப்பார். சிலர் நம்புவதை விரும்புகிறார்கள். சிலர் பரிபூர்ணமாக நம்புகிறார்கள். சிலர் பயந்து நம்புகிறார்கள். சிலர் சந்தேகத்தோடு 'நம்பித்தான் வைப்போமே எல்லாரும் நம்பறாங்க..நம்ம என்ன கெட்டா போய்ட்டோம்' னு நம்புகிறார்கள். சிலர் மூளைச் சலவை செய்யப்பட்டு நம்ப வைக்கப் படுகிறார்கள். சிலர் நம்பாதது போல் நடிக்கிறார்கள். மீதி இருப்பவர்கள் நம்புவதே இல்லை. நாம் நம்புகிறோமா? இல்லையா?

ஐன்ஸ்டீன் கடவுளைப் பற்றி..

"WHAT I SEE IN NATURE IS A MAGNIFICENT STRUCTURE THAT WE CAN COMPREHEND ONLY VERY IMPERFECTLY, AND THAT MUST FILL A THINKING PERSON WITH A FEELING OF "HUMILITY." THIS IS A GENUINELY RELIGIOUS FEELING THAT HAS NOTHING TO DO WITH MYSTICISM."

அடுத்ததில் இதைப் பற்றி பார்ப்போம்.

Sunday, January 24, 2010

ஆயிரத்தில் ஒருவ(னா)?

படம் – ஆயிரத்தில் ஒருவன்
எழுத்து & இயக்கம் – செல்வராகவன்

பெருவாரியான மக்களை சென்றடையாத எந்த ஒரு படைப்பும் முழுமையடையாது. அதில் ஒன்றுதான் இந்தப் படம்.

முதல் பாதியில் செல்வராகவன் எல்லோரையும் நிமிர்ந்து உட்கார்ந்து சிரிக்க வைக்கிறார். பின் பாதியில் பாயைப் பிறாண்ட வைக்கிறார்.

எல்லா அட்வென்ச்சர் படம் போலவே கதை எளிமையானதுதான். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழர்களைத் தேடி போகின்றனர் ஒரு குழு. அதில் முக்கியமானவர்கள் ரீமா சென், கார்த்தி, ஆண்ட்ரியா. அதை அவர்கள் அடைந்த பின் வரும் திடீர்த் திருப்பங்களும் அதனால் வரும் அக்கப்போர்களும் தான் கதை.

முதலில் படத்தின் நிறைகளைப் பாராட்டி விடுவோம். தமிழில் இது போல ஒரு “GENRE”ல் படம் வந்ததே இல்லை. அதற்காக செல்வாவை தாராளமாக கை வலிக்கும் வரை குலுக்கலாம். படத்தின் பிரம்மாண்டத்திற்காக ஒவ்வொரு நுணுக்கிலும் மெனக்கெட்டிருக்கிறார். அது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. காட்டில் நெளியும் பாம்புகளாகட்டும், அடர்ந்த காடுகளின் பசுமையிலும், தைரியமாக எடுக்கப்பட்ட கதைக்கும், தேடிப் பிடித்த லொகேஷன்களிலும், மிரட்டும் மர்மதிலும், அவரின் உழைப்பு தெரிகிறது. படத்தில் கவனிக்கப் பட வேண்டியவர்கள் மூன்று பேர். கார்த்தி, ரீமா சென், பார்த்திபன். எல்லோரும் கொடுக்கப்பட்டதை கம்பீரமாக செய்திருக்கின்றனர். கார்த்தியின் ஒவ்வொரு அலப்பரைக்கும் கைதட்டல் உண்டு. பார்த்திபன் மிடுக்காக ஒரு மன்னனுக்கே உரிய கர்வத்துடன் வருகிறார். (அனால் ஏன் அவ்வளவு புரியாத மொழி பேசுகிறார்?) ரீமா சென் கண்களில் காமத்துடனும், வெறியுடனும், இடைவேளைக்கு பிறகு புதிய அவதாரமெடுத்து பயமுறுத்துகிறார். (உச்சரிப்பில் இன்னும் நேர்த்தி தேவை) கலை இயக்கம் அபாரம். சோழர் குகைகளையும் சிலைகளையும் மிகுந்த உழைப்போடு செய்திருக்கிறார். பாட்டில் சூடு பிடிக்கும் இசை, பின்னணியில் சற்றே சறுக்குகிறது. கேமரா இயற்கையையும் திகிலையும் அள்ளி வந்திருகிறது. 

முதல் பாதி இரண்டு குதிரைகளை கட்டிக் கொண்டு “ஜிவ்” என்று பறக்கிறது. ஆங்காங்கே பல ஆங்கிலப் படங்களை நினைவு படுத்தினாலும் படத்தின் விறுவிறுப்பில் அது மறைந்து போகின்றது. ஒவ்வொரு பொறியையும் அவர்கள் கடக்கும் போது, நாமும் அவர்கள் கூடவே பயணிக்கிறோம். முதல் ஒன்றரை மணி நேரம் நம்மை கட்டிப் போடுகிறார் இயக்குனர்.

இரண்டாவது பாதியில் யாரையாவது கூப்பிட்டு படத்தை தள்ள வேண்டியிருக்கிறது. நல்ல கதையை சுவாரஸ்யமாக சொல்லும் திறனில் கோட்டை விடுகிறார் செல்வா. படத்தின் பெரிய குறை பல பேருக்கு இரண்டாம் பாதிப் படம் புரியாததுதான். பின்பாதி யாருக்கும் புரிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல் பட்டிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு உபயோகப்பட்டது பல. முக்கியமானது,        1. மொழி, 2. திரைக்கதை. சோழர்கள் பேசும் மொழி தமிழ்தான். இருப்பினும், அதற்கே ஒரு கோனார் உரை தேவையாய் இருக்கிறது. ஓரளவு தமிழ் தெரிந்தவர்களையும் படுத்தி விடுகிறது. யதார்த்தம் தேவைதான். அதற்காக இப்படியா? இயல்பான தமிழை கொஞ்சம் கலந்திருந்தால், சற்றே தெளிவாகி இருக்கும். திரைக்கதை என்ற ஒரு வஸ்து பிற்பாதியில் இருக்கிறதா என்று படத்தில் வரும் ராணுவத்தைதான் தேட சொல்ல வேண்டும். அப்படியே இருந்தாலும் அது யாருக்கும் புரியாமல் போனதில்தான் பெரிய சோகம். படத்தில் பிற்பாதி முழுக்க வரும் எல்லா முக்கிய நிகழ்வுகளும் மூடநம்பிக்கைகள்  மூலமாக சித்தரிக்கப்  பட்டிருப்பது ஒரு பெரிய பின்னடைவு. “FANTASY”யை ஊறுகாய் போல அல்லாமல், அதுவே கதையை நகர்த்தி செல்வது, விட்டலாச்சார்யா படம் பார்த்த உணர்வைத் தருகிறது. ரீமா சென் மேல் “ப்ளூ” கலரில் ஏதோ சுற்றி சுற்றி பயம் காட்ட, அவருக்கு சன்னதம் வந்து, முதுகை பிரித்து க்ராபிக்ஸ்ல் சோழர்கள் புலி காட்டுகிறார். பீரைக் கொடு, சிக்கனைக் கொடுன்னு சோழர்களை சொரண்டிக் கொண்டிருந்த கார்த்தி, ராஜ குரு வந்து விரலில் புள்ளி புள்ளியாய் மின்னலை அவர் மீது பாய்ச்சி விட்டு மண்டையை போட்டவுடன், போரில் பறந்து பறந்து வாள் சண்டை போட்டு பலரை குத்துகிறார் (நம்மையும் சேர்த்துத்தான்). ஏழு ஆபத்துகளை பாதி படம் வரை கஷ்டப்பட்டு கடக்கிறார்கள். ஆனால், கிளைமாக்ஸ்ல் ஐந்து நிமிடத்தில் ராணுவம் வந்து முகாம் அமைத்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு சண்டை போடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தேவனுக்கே தெலுசு! க்ராபிக்ஸ் அங்கங்கே “அட” போடா வைக்கிறது. பல இடங்களில் “ஆஆவ்.....”. கடலும், அருவியும், புழுதியும், சண்டையும் மாறி மாறி வருகிறது.

கடைசியாக அந்த சிலையை காட்டுகிறார்கள், அடடா! என்ன ஒரு மொக்கையான சிலை! நமக்கு, இந்த சிலைக்காகத்தனா இவ்வளவு தூரம் வந்தார்கள் என்று தோன்றுகிறது. எதாவது ஒரு அழகான சிலையையாவது வைக்கக் கூடாதா? வன்முறையும் ரத்தமும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை ஆட்சி செய்கிறது. பொழுது போகவில்லை என்றால் யாரையாவது கொல்கிறார்கள். இல்லை நரபலி கொடுக்கிறார்கள். இன்னும் ரத்தம் வேண்டும் என்று கேட்பவர்களுக்காகவே ஒரு சுமாரான கிராபிக்ஸ்ல்  “க்ளாடியேட்டர்” சண்டை வைத்திருக்கிறார்கள். போரில் சோழர்கள் வெல்வதற்கு ஒரு தாத்தா தன்னை தானே பலி கொடுத்துக் கொள்கிறார். ரத்தம் நம் முகத்தில் தெறிக்கிறது. “சென்சார்” நன்றாக தூங்கிவிட்டார்கள் அல்லது தூங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். “AA” கொடுக்க வேண்டும் படத்திற்கு.

படத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு காரணம் நாமே யூகிக்க வேண்டியிருக்கிறது அல்லது விக்கிபீடியா படித்து தெரிந்து கொள்ள வேண்டும்! (படத்தில் சொல்லுவார்களோ என்னவோ, யாருக்கு புரிகிறது அவர்கள் பேசுவது?) உதாரணத்திற்கு ரீமா சென், பார்த்திபனை மயக்கி புணரத் துடிப்பது எதற்கு? (கலாசார நம்பிக்கை? என்னே தமிழ் கலாசாரம்!) கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா ஆகியோருக்கு திடீர் என்று பைத்தியம் பிடிப்பது எதனால்? ரீமா எதற்கு திடீரென்று கார்த்தியை சுடுகிறார்? (ஒரு வேளை அவர் துப்பாக்கியை வைத்துக் கொண்டே ஆடியதால் கை தவறி குண்டு வெடித்ததோ?:-)) அந்த பயங்கரமான “ராஜ குரு” முன் எல்லோரும் ஏன் “strip tease” செய்கிறார்கள்? இப்படி பல ‘ஏன்’ கேள்விகள் இரண்டாம் பாதி எங்கும் விரவிக் கிடக்கின்றது. எதோ புரிவது போன்ற பாவனை மட்டுமே செய்ய முடிகிறது நம்மால்! சிறிது யோசித்தால் புரியும். ஆனால் யோசிக்கவா படத்திற்கு வருகிறோம்? சிறிது படித்தவர்களுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், “சி” சென்டர் மக்கள் பாடு திண்டாட்டம்தான். இதைப் பார்த்துவிட்டு ஒன்று நினைக்கத் தோன்றுகிறது.செல்வா எல்லாவற்றிற்கும் காரணங்களை நிறைய எடுத்து, படத்தை ஓட்டிப் பார்க்கும் போது, ஆறு மணி நேரத்தைத் தாண்டி அதிர்ச்சி கொடுத்திருக்கும். அதனால், பல ரீல்களை வெட்டி நமக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். (தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று சொல்லத் தேவை இல்லை!)

எந்த ஒரு படத்திற்கும் ஒரு தாரக மந்திரம் உண்டு “நிறைய எழுதலாம்! ஆனால் நிறைய எடுக்கக் கூடாது!”

இன்னொன்று, சோழர்களை பற்றிக் காட்டி இருப்பது. படத்தின் ஆரம்பத்தில், “சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் படத்தில் வருவது எல்லாம் சோழர்களையே அடையளப்படுத்துகிறது. (புலிச் சின்னம், தஞ்சாவூர்) படம் நன்றாக இருந்திருந்தால் யாரும் இதை கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். படம் இப்பொழுது ஊத்திக் கொண்டால், அதற்கு காரணம் சோழர்களை அவமானப்படுதியதுதான் என்று ஒரு கும்பல் கெளம்பும். எப்படி இருந்தாலும் ஒரு தமிழ் ராஜா தன் மக்களையே நரபலி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுமார் எட்டு முதல் பத்தாம் நூற்றாண்டுகளிலேயே நரபலி கொடுப்பது என்பது தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது 21-ம் நூற்றாண்டில் சரடு விடுகிறார்கள்.  என்னதான் அவன் சோழன் இல்லை என்று டைட்டில் கார்டு போட்டாலும், அந்த பெயர் நம்மை குத்துகிறது. பல அரிய கருவூலங்களை நமக்குத் தந்த சோழர்களை, நம்மை விட உயர்ந்த பண்பாடுள்ள ஒரு சமூகத்தில் வாழ்ந்திருந்த மக்களை, ஒரு நர மாமிசம் சாப்பிடுபவர்களாக, தன் மக்களையே கொல்லும் அரசனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடைசியில் வெளியில் வரும் போது நமக்கு படத்துடைய பிரமாண்டத்தின் மலைப்பும் அதை மறக்க வைக்கும் தலைவலியும் தான் மிஞ்சுகிறது. படம் முடியும் பொழுது இதனுடைய தொடர்ச்சி வெளிவரும் என்ற எச்சரிக்கை நமக்கு காய்ச்சலையும் சேர்த்து வரவழைக்கிறது!

Sunday, January 10, 2010

கண்ணதாசன் - மாண்டவர் மீண்டும் வாழ்கிறார்!

           இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த/பிடித்த பாடல். பலரையும் பாதித்த பாடலும் கூட. இந்த பாடலுக்கு ஒரு பானை சோறு. 
           கவிஞர் வாலி ஒரு முறை ஒரு பேட்டியில் இந்த பாடல் அவருடைய வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியதாக சொல்லிருந்தார். அவர் திரைப் பாடலாசிரியர் வாய்ப்புக்காக பல நாள் முயற்சித்து, சில படங்கள் கிடைத்து, அதுவும் தள்ளிப் போயிருந்த சமயங்களில், சிறிது விரக்தியில் இருந்தார். அந்த சமயத்தில் டெல்லியில் ஒரு வேலையில் வந்து  சேரச் சொல்லி அவருக்கு அஞ்சல் வந்திருந்தது. சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு அதில் சேர்வதாக முடிவெடுத்து, கிளம்புவதற்கு முன்பு கடைசியாக நண்பர் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை பார்க்கச் சென்றிருந்தார். ஸ்ரீனிவாஸ் அவர்கள் அன்று ஒலிப்பதிவு செய்த பாடலை அவருக்காக பாடிக் காட்டினார். அந்தப் பாடலைக் கேட்டவுடன் கவிஞர் வாலி மறுநாள் டெல்லி செல்வதற்காக பதிவு செய்திருந்த டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு மீண்டும் பாடலாசிரியவதர்கான தனது முயற்சியை தொடர்ந்தார். அதன் பின் நடந்தது வரலாறு. (நன்றி: தினத்தந்தி;வராலாற்று சுவடுகள்)
         இப்படிப்பட்ட எளிமையான நடையில் ஆழமான பாடல்கள் இன்று எழுதுவாரில்லை. வாழ்க்கையில் நிலை கொள்ளாமல் தவிக்கும், வருத்தங்கள் தழுவும் எல்லா பொழுதுகளிலும் இந்த பாடலைக் கேட்டால் மனம் அமைதி பெறும். அமைதி பெறாவிட்டால் திரும்ப கேளுங்கள்! அப்படியும் பெறாவிட்டால்...உங்களுக்கு தமிழ் தெரியாது என்று நீங்கள் அன்று கண்டு கொள்ளலாம்.


படம்: சுமைதாங்கி
பாடல் வரிகள்: கண்ணதாசன்


மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை...
வாடி நின்றால் ஓடுவதில்லை...
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

Monday, January 4, 2010

குறுகுறுங் கதைகள்!


இவை நான் முயற்சித்த சின்னஞ் சிறு கதைகள்.
இது  போன்ற புதிய முகம் கொண்ட கதைகளை தமிழுக்கு முதலில் அறிமுகப் படுத்தியவர் என் அறிவுக்கு எட்டிய வரை சுஜாதாதான். தமிழை இலக்கியம், செய்யுள் இது போன்ற முரடான நடைக்கு மட்டுமே உரித்தானது  என்ற பொதுவான அபிப்ராயம் பல நூற்றாண்டுகளாக பல முயற்சிகளால் உடைக்கப்பட்டு வந்திருகிறது. ‘மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தன்னை புதுப்பித்துக் கொள்ளும் மொழியே நீண்ட காலம் ஜீவித்திருக்கும்என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாக்கு. அப்படிப்பட்ட ஒரு மொழியான தமிழில், அதன் புதிய பக்கங்களில், எனது மிகச சிறிய பதிப்பு.
******************************************************************************************
நான் உற்சாகமாக விமானத்திலிருந்து குதித்தேன். என் பாரஷூட் பட்டன் இயங்கவில்லை.

******************************************************************************************
ஒழுங்கு


எனக்கு ஒரு துப்பாக்கி வாங்க வேண்டும். எதற்கு என்று உங்களுக்கு தெரியுமாதலால் கேட்காதீர்கள். என் ஃபிரண்டு கோட்டு சொன்னான், பாய் கடைக்கு பக்கத்து சந்துல டாஸ்மாக் உள்ள புகுந்து வெளில வந்தா தெரியற முதல் மஞ்ச மண்டில, சலம்னு ஒரு ஆளு விக்கறான்னு. கோட்டு இதுல எல்லாம் பெரிய ஆளு. எங்கெங்க பங்கு கெடைக்குதுன்னு கூட சில சமயம் சொல்லுவான். அந்த மஞ்சள் கோடௌன் போய் அவன் பெயரையும் செல் நம்பரையும் சொன்னா அவனுக்கு கால் பண்ணி உறுதி படுத்திகிட்டு பொருள கொடுத்துடுவங்களாம். கொஞ்சம் செலவு ஆகும்னான். செலவை பத்தி என்ன கவலை....எனக்கு பணம் பெருசில்ல, காரியம் முடியணும். இன்னிக்கு எல்லாம் முடிஞ்சுடும். முடிஞ்சதும் ஒரு ரெண்டு மூணு நாள் வெளியூர் போயிட்டு வந்தா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தோணிச்சு. பண்டிகையா இருக்கறதால யாரும் சந்தேக பட மாட்டங்க. அதுக்கு முன்னாடி காரியம் முக்கியம். அந்த எடத்துக்கு போனேன். மண்டி கதவை தட்டின உடனே என்னை அலேக்கா தூக்கிட்டு போய் பணம் வாங்கிட்டு பொருள கொடுத்தாங்க. ஒருத்தன் சொன்னான். அரசாங்க இயந்திரம் முன்ன மாதிரி இல்ல பிரதர்..கவனம்!”. இனிப்பு டப்பாவில் மறைத்து பூனை போல் வீட்டுக்கு வந்தேன். மணி பார்த்தேன். டுட்டு வரும் நேரம்தான். கதவு பின் மறைந்தேன். செய்தித் தாள் பிரித்து கடைசியில் இருந்து ஆரம்பித்தேன். முதல் பக்கத்தில் ஓரங்கட்டப்பட்ட செய்தி சொல்லியது, தீபாவளி அன்று துப்பாக்கியில் பட்டாசு வெடிக்க தடை! மீறுபவர்களுக்கு கடும் தண்டனை!. வாசலில் என் பையன் டுட்டு பெல் அடித்தான்.

******************************************************************************************

துப்பாக்கி வெடித்தது-ட்ட்டப்’. ஓட்டப் பந்தயம் தொடங்கியது. முதலாவதாய் வந்தான் அந்தப் பையன் கைகளால் தவழ்ந்து.
******************************************************************************************