Friday, December 14, 2012

மொழி



பேராசிரியர் கல்கி ஒரு சிறுவனிடம் கேட்டார்....சுதேசமித்திரன் ஆபீஸ் எங்கே இருக்கிறது தெரியுமா?”
பையன் கூறுகிறான்...ஓ..தெரியுமே!
எங்கே?”
பிளாசா டாக்கீஸ் பக்கத்தில்...
அடுத்த வினாடி பளார்என அறை விழுந்தது பையனுக்கு.
திருதிருவென விழித்த சிறுவனைப் பார்த்து...பிளாசா டாக்கீசை வைத்து சுதேசமித்திரன் காரியாலயத்தை அடையாளம் காட்டுகிறான்...தடிப்பயல்!!என்று நொந்து கொண்டார் கல்கி.
:::தெரியாதவர்களுக்கு:- சுதேசமித்திரன் என்பது பாரதத்தின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முக்கிய நாளிதழ்:::

இன்று இதைப் படித்தவுடன் நினைத்துப் பார்க்கிறேன்....
பிற்காலத்தில் (நிகழ்காலத்திலும்தான்) என்றாவது ஒரு ஆசிரியர் மாணவனிடம்
பாரதியின் பிறந்த தினம் தெரியுமா?” எனக் கேட்க,
பையன் ஓ...தெரியுமே...ரஜினியின் பிறந்த தினத்திற்கு முந்திய தினம்...!!என்று கூற,
ஆசிரியர் வெரி குட்....ப்ரௌட் ஆஃப் யு!என்று கூறினால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதன் மூலமாக நான் ரஜினியின் உழைப்பையோ, அவர் அடைந்த உயரத்தையோ குறை கூறவில்லை. அவரின் சாதனைகள் பாராட்டுக்குறியவையே. ஒரு நடிகரைப் போல பேசி நடிக்கும் குழந்தைக்காக கைதட்டி பெருமைப்படும் நாம், ஏன் நம் நாட்டின் விடுதலைக்காகவும் மேன்மைக்ககவும் பாடுபட்ட நல்லோர்களைப் பற்றி அந்தக் குழந்தை தெரிந்து கொள்ளவில்லையே என்று வருத்தப்படுவதில்லை? பாரதியையும், தமிழ் நல்லுலகத்தில் வாழ்ந்த பெரியோர்களையும் தெரிந்து கொள்வதற்கு, முதலில் தமிழையும் அதன் மேன்மையையும் அறிந்து கொள்வது முக்கியமாகிறது. தமிழ் தெரியாத ஒருவர், பாரதியைப் பற்றி அறியாத்தில் வருந்தாதது ஆச்சர்யமில்லை. நமது வீட்டின், சமூகத்தின், பேசுமொழி தமிழில் இருந்து வேறு மொழிக்கு மாறுவதில் இருந்து இது தொடங்குகிறது. குழந்தை, “டாடி...மம்மிஎனக் கூறும் பொழுது புளகாங்கிதம் அடையும் நாம், "அப்பா..அம்மா" என்று கூப்பிட்டால, "டாடி, மம்மிஎனக் கூப்பிடுமாறு அன்பாகவோ அடித்தோ திருத்துகிறோம். நமது பள்ளிகளில் மட்டும்தான் தாய் மொழியில் பேசினால் பைன்போடுகிறோம்! நான் சிறு வயதில், பள்ளியில் பைன் கட்டாமல் ஆங்கிலத்தில் பேசியதால்தான் இன்று திறமையாக ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவரது வாய்க்கு நிச்சயம் போஜனம் கிடைக்காது.

பெரிய நகரங்களில் படிக்கும் மாணவர்கள், தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கு பயணம் செய்யும் பொழுது, பெயர் பலகைகளில் இருக்கும் மூன்றெழுத்து மதுரையைப் படிக்க முழுதாய் மூன்று நிமிடம் ஆகிறது (சென்னையில் இந்த பிரச்சனை இல்லை, இரு மொழிகளிலும் எழுதி இருப்பதால்!). மொழியைக் கற்காததின் காரணமாகவே, அவர்கள் பல அனுபவங்களை, தம்மை அறியாமலே இழக்கிறார்கள். இன்று நாம் உபயோகப் படுத்தும் சில வார்த்தைகள் தமிழ் இல்லை என்று சொல்லி மாற்றி அமைத்தால், அடிக்க வர ஒரு பெரும் கும்பலே இருக்கிறது. உதாரணத்திற்கு சில: சைக்கிள், செயின், பஸ், கண்டக்டர், ஓகே, காஸ், பெட்ரோல், நியூஸ்பேப்பர், ஆட்டோ....மேலும் கூறலாம். இவை எண்ணில் அடங்கா. இனி என்றும், இந்த வார்த்தைகளுக்கான தமிழ் வடிவத்தை பேச்சு வழக்கில் காணவே முடியாது. இப்படியே, நம் கண்களுக்குத் தெரியாமலேயே, நம்மை, நம் மொழியை, நாமே செல்லரித்துக் கொண்டிருக்கிறோம். நாமும் தமிழைப் பேசாமல், நமது குழந்தைகளுக்கும் கற்பிக்காமல், பேசுபவரையும் உதாசீனப்படுத்தும் போக்கு அபாயகரமானது. அப்படியாவது ஒழுங்காக ஆங்கிலம் பேசுகிறோமா என்றால், அதுவும் இல்லை. கொச்சையான ஆங்கிலத்தில் உரையாடி, நம்மை நாமே மேதைகள் என்று புகழ்ந்து கொள்வது அறிவீனத்தின் உச்சம். இரண்டு வட இந்தியர்கள் சந்தித்தால் ஹிந்தியில் மட்டுமே உரையாடுகிறார்கள். தெலுங்கர்களும், மலையாளிகளும் சந்தித்தால் ஆங்கிலத்தில் உரையாடுவதில்லை. அதற்காக, அவர்கள் அனைவரும் முழுமையாக தங்கள் மொழியை அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், பெரும்பான்மையான விழுக்காடே இங்கே பேசுபொருள். ஆங்கிலத்தில் பேசினால்தான் நம்மை அறிவாளிகளாக மதிப்பார்கள் என்ற பொய்யான பிம்பமே தமிழ் தெரிந்தவர்களையும் ஆங்கிலத்தில் பேச வைக்கிறது. ஜப்பானியர்களுக்கும் ஆங்கிலம் தெரியும். அனால் ஜப்பான் தெருவில் செல்லும் ஒருவரை நிறுத்தி ஆங்கிலத்தில் வழி கேட்டால், பெரும்பாலும் அவர் பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டு ஓடிவிட வாய்ப்புண்டு. எங்கே ஆங்கிலத்தில் பேசினால் தவறாகி விடுமோ என்ற பயமே அவரை ஓடச் செய்கிறது. இங்கே நிலைமை தலை கீழாய் இருக்கிறது. தமிழில் பேசினால் எங்கே தவறாகி விடுமோ என அஞ்சி சிலர் கற்பிழந்த ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

சில தினங்கள் முன்பு நூலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு புத்தகத் தேடல் சம்பந்தமாக நூலக மேலாளரை அணுகி, முதலில் சந்தேகத்தோடே ஆங்கிலத்தில் என் கேள்வியைக் கேட்டேன். அவரின் தோற்றமும் பதிலின் தரமும் அவர் தமிழ் என்பதை பறைசாற்றின. நீங்க தமிழா?” என்று கேட்டேன். எஸ்!என பதில் வந்தது. சரி, பின்னால் வரும் பதில்கள் தமிழில் வரும் என எண்ணி, என் அடுத்த கேள்விகளை தமிழில் கேட்க, அவர் கடைசி வரை மறந்தும் தமிழில் பதில் சொல்லவில்லை. இத்தனைக்கும் என் கேள்வியும் தமிழ் புத்தகத்தைப் பற்றியே! அவர் பதில் சொல்லாததற்கு காரணம், தமிழ் சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதுவாக இருக்க வாய்ப்பில்லை என்பது அவரின் தெளிவான பதிலில் (புரிதலில்)  இருந்து தெரிந்தது. அப்படி ஒன்றும் அவர் நல்ல ஆங்கிலம் பேசி விடவில்லை. பிறகு எதற்கு இந்த போலி கெளரவம்?

ஆங்கில மோகத்திற்கு அதன் நாசூக்கும் ஒரு போலி வசீகரத்தை உண்டாகுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்து தண்ணி அடிக்கப் போலாமா?” என்று கேட்டால், உங்களுக்கு சுற்றி இருக்கும் திடீர் ஹீரோக்களிடம் தர்ம அடியும், இலவச இணைப்பாகப் புழல் களியும் நிச்சயம். இதையே ஆங்கிலத்தில் காபி குடிக்கலாமா?” என்பது போல ஷேல் வி கோ ஃபார் பஃப் (pub) டூநைட்?” என்று நாகரிகமாக (!!?) கேட்டு விட முடிகிறது, அல்லது நாகரீகமாக கேட்பதாக நம்பப்படுகிறது. இதற்கு மறுமொழியாக செல்லமாக அந்தப் பெண்ணிடம் இருந்து அடி கூடக் கிடைக்கலாம்!! இன்று பெரு நகரங்களின் ஐ.டி அலுவகலங்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் குடிப் பழக்கம் பெருகி வருவதாய் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்காக ஆங்கிலம் பேசுவதால்தான் அவர்கள் பழக்கப்படுகிரார்கள் என்று கூறவில்லை. மொழி மாறும் பொழுது தீயவை கூட நல்ல தோல் போர்த்திக் கொள்கிறது. “மலம்என்று சொல்லும் போதே நமக்கு நாகூசுகிறது. ஆனால் அனைவரும் “shit” என்பதை எந்தக் கூச்சமும் இன்றி பலமுறை பிரயோகிக்கிறோம்.

     மொழி என்பது வெறும் ஊடகம் “Afterall, language is a medium to communicate” என்று கூறி மழுப்பும் ஆட்கள் உண்டு. அவர்களுக்கு நாஞ்சில் நாடனின் கேள்வியை மேற்கோளாக்குகிறேன். தாய் என்பவள் வெறும் Carrier மாத்திரமா? தண்ணீர் என்பது வெறும் drink மாத்திரமா?”. மொழி என்பது உயிர்களின் நீராதாரம் போன்றது.

விசும்பின்துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்பு அரிது

பசும்புல்லின் தலை மட்டுமல்ல, மனிதன் உட்பட அனைத்து உயிர்களின் தலையும் இதில் அடங்கும். அது போலவே மொழியும். தமிழ் எங்கள் பேச்சு, மூச்சு, உயிர்என அரசியல்வாதிகள் போல ஜல்லி அடிக்காமல்ஏன் தமிழில் உரையாட வேண்டும்” என்று அறிவுப்பூர்வமாகப் பார்க்க வேண்டும். மனிதனின் தலைசிறந்த கண்டுபிடிப்பு மொழி. கடவுளுக்கு முன்பே தோன்றி விட்டது! மொழி என்பது நம்மை, நம் வரலாரற்றை, தொன்மையை, பண்பாட்டை அறிய முதன்மையான வழி. தாய் மொழியை சரியாகப் பயிலாதவன் எம்மொழியையும் உருப்படியாகப் பயில இயலாது என்பது பலமுறை அரங்கேறி வரும் நிதர்சனம். மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். மொழி அழியும் பொழுது இனமே அழிந்த உண்மைகள் வரலாற்றில் சிதறிக் கிடக்கிறது. ஜப்பானிய மொழி பேசுவதால்தான் அவர்கள் ஜப்பானியர்கள் என அழைக்கப் படுகிறார்கள். பிரெஞ்சுகாரர்கள் என பெயர் சூட்டு விழா நடத்தி விட்டு யாரும் பிரெஞ்சு மொழி பேசுவதில்லை. மதமோ, ஜாதியோ மக்களை முதலில் பிரிக்கவில்லை. மொழியால் மட்டுமே ஒரு நாடோ, மக்களோ, இனமோ தனித்துவம் பெறுகிறது. பிறகு வந்ததே மதம். ஒருவரின் பெயரைப் போன்று அடையாளம் தருவது மொழி. பெயரை இழந்து விட்டு நம்மில் ஒருவர் வாழ்ந்து விட முடியுமா?

     ஹாய் மதனில் ஒரு கேள்வி. ”உலகிலேயே சுலபான மொழி எது?” பதில், “தாய்மொழி!” என்று கூறியிருந்தார். சற்றே சிந்தித்து பாருங்கள், நீங்கள் கஷ்டம் என  நினைக்கும் மொழியை, ஒரு சிறுமி அனாயாசமாகப் பேசுகிறாள், அது அவளின் தாய் மொழியாக இருப்பதால். தாய் மொழியில் பேசும், சிந்திக்கும் குழந்தையின் மூளை மற்றும் மன வளர்ச்சி அந்த மொழியில் பேசாத குழந்தையை விட அதிகமாக இருப்பதை விஞ்ஞானம் நிரூபிக்கிறது. ஒரு மனிதனின் குணம், ஆளுமை, திறமை, நிறை, குறைகளை நிர்ணயிப்பதில் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தாய் மொழி ஒரு குழந்தையை அதன் குடும்பம், பண்பாடு, வரலாறு, மதம், சமூகம் என அனைத்தோடும் ஒரு கோடு போல் இணைக்கிறது.  

“ஒரு மனிதனுக்கு புரியும் மொழியில் பேசினால் அது அவனின் மூளையை சென்றடையும். அவரின் தாய் மொழியில் பேசினால் அது அவரின் இதயத்தை சென்றடையும்” என்றார் நெல்சன் மண்டேலா. நாம் நம் சந்தததியை மனிதத்தன்மையோடு பார்க்க ஆசைப்படுகிறோமா அல்லது மூளைத்தனத்தோடா?     

இதற்கான மாற்றங்கள் வீட்டிலிருந்தும் பள்ளியிலும் தொடங்க வேண்டும்.

  • வீட்டில் பேசுமொழி தமிழாக இருக்க வேண்டும்
  • எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் என்பது ஒரு கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்
  • தமிழில் வாசிப்பு பழக்கம் மிக முக்கியமானது. வாசிப்பே ஒருவரின் சொல்வளத்தைப் பெருக்கும். மேலும், மொழியைப் பற்றிப் பெருமைப்படவும், மொழியின் வேறு பரிமாணங்களை அறிவதற்குமான தூண்டுகோலாக அமையும்.
வீட்டில், ஆங்கில நாளிதழோடு, தமிழ் செய்தித்தாளும், வார இதழ்களும் வாங்க வேண்டும். வாசிப்பு பழக்கம் தினத்தந்தி, சிறுவர்மலரில் இருந்து தொடங்குகிறது. வாரமலர், குமுதம், விகடன், நாவல், கவிதை, இலக்கியம் என வாசிப்பு உங்களை அடுத்தடுத்த தளங்களுக்கு தானாகவே இழுத்துச் செல்லும். வாரப் பத்திரிகைகள் படித்தல் பெரும் பாவம் போலவும், படிப்பவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்பது கட்டுக்கதை. அப்படி சொல்பவர்கள் அனைவரும் தங்கள் சிறு வயதில் அதை விட மோசமான புத்தகங்களை படித்திருப்பார்கள்! வார இதழ்கள், செய்தித்தாள்கள்,  படிக்கும் போதுதான் நல்ல புத்தகங்களுக்கான தேடல் அதிகமாகும். மொழி கடந்த நல்ல தேடல்களுக்கும் வழி வகுக்கும்
  • ஆங்கில ரைம்ஸ், ஆங்கிலக் கதைகளோடு தமிழ் பாடல்கள், தமிழ் கதைகளைப் குழந்தைகளோடு பகிர வேண்டும்
  • தினம் பத்து நிமிடம் தமிழில் படிக்க ஊக்குவிக்க வேண்டும்
  • எளிதான குறள், பாசுரம் இவற்றை நல்ல கதைகளோடு சொல்ல வேண்டும்
  • ஓரளவு விவரம் தெரியும் வயதில் மாதம் ஒருமுறையாவது நூலகம் அழைத்து செல்ல வேண்டும்
  • மேற்சொன்ன அனைத்தையும் வீட்டிலுள்ள பெரியோர்களும் பின்பற்ற வேண்டும்

கைப்புண்ணிற்கு கண்ணாடி எதற்கு? புண்ணும் அதற்கான மருந்தும் நம்மிடமே இருக்கிறது.

Friday, October 1, 2010

எந்திரன் - விஷுவல் விருந்து!!


காத்திருந்த நாட்கள் முடிந்து திரையைத் தொட்டுவிட்டது எந்திரன்! இது போன்ற ஒபனிங் இந்தப் படத்தில் பணி புரிந்த ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய் இவர்களுக்கு இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே. இது போல் இன்னொரு படம் தமிழில் வருமா என்பதும் கேள்விக் குறியே! எதிர்பார்ப்பைத் தோற்றுவிப்பதை விட அதைப் பூர்த்தி செய்வது அதை விட கடுமையான சவால். அதில் முழு வெற்றி பெற்றிருக்கிறான் எந்திரன்.


ஷங்கரின் எல்லா படத்திலும் கதை என்பது ஒரு நூலிழை அளவுதான் இருக்கும். அதை எப்படி காட்சிப்படுதுகிறார் என்பதில்தான் மலையளவு வேறுபட்டு வெல்கிறார். எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல என்றாலும், சொல்லப்பட்ட விஷயம் இந்திய சினிமாவுக்கே புதுசு என்பதால், எக்கச்சக்கமாக எல்லோர் பல்சும் எகிறுகிறது. "இது நடந்தா என்ன ஆகும்?" அப்படிங்கற ஒரு வரில எல்லா படத்தையும் வரையறைப் படுத்திடலாம். அந்த ஒரு வரி புதுசா, கவருகிற மாதிரி இருந்தாலே பாதி வெற்றிதான். இந்தப் படத்தில், "விஞ்ஞானி வசீகரன் உருவாக்கும் ரோபோ, அவருக்கே ஆப்பு வைக்க நினைத்தால் என்ன ஆகும்?" அப்படிங்கறதை முடிஞ்ச அளவுக்கு எளிமையா, அழகா, விறுவிறுப்பா, புதுசா புன்னகையோட சொல்ல வர்றான் எந்திரன்.

இவ்வளவு பெரிய படத்துக்கு வலுவான கதாபாத்திரங்களும் திரைக்கதையும் இல்லாவிட்டால் அனைத்தும் "விழலுக்கு இறைத்த நீர்". ஷங்கர் மீண்டும் தான் ஒரு தேர்ந்த திரைக்கதை எழுத்தாளர் என்பதை நிரூபித்திருக்கிறார் (வெகு சில காட்சிகளைத் தவிர). ஒரு சாமானியனுக்கு அதிகப்படியான டெக்னாலஜி வார்த்தைகளைப்  போட்டுக் குழப்புவதை தவிர, மற்றபடி அழகாகப் படிப்படியாக படத்தை நம் கண் முன் விரிக்கிறார். 'நிறைய பிரச்சனை இருந்தால் எதைத் தீர்ப்பது என்று தெரியாமல் திரைக்கதை தத்தளிக்கும்' என்பது அடிப்படை விதி. அதே சமயம், ஒன்று இருந்தாலும் சில சமயங்களில் போர் அடித்து விடும். ஆனால் ஒரே ஒரு ஆதாரமான பிரச்சனையை  வைத்துக் கொண்டு மூன்று மணி நேரம் கத்தி மேல் நடந்து இலக்கை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது. அதற்கு பக்கபலமாக மூன்று காரணங்கள் சொல்லலாம். 1. ரஜினி 2. ரஜினி 3. ரஜினி.

இந்த வயதிலும், அவரின் அர்ப்பணிப்பு, எந்த ஒரு காட்சியையும் அனாயாசமாக அதனுடைய உச்சத்துக்கு உயர்த்தும் திறமை, அந்த் திறமையை கையாளும் லாவகம், காமெடியிலும் வில்லத்தனத்திலும் மிஸ் ஆகாத டைமிங் சென்ஸ் என ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவரின் உழைப்பு காட்சியின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது. அவரின் வழக்கமான மசாலாவில் இருந்து விடுபட்டு நடித்ததற்க்கே அவருக்கு, அவர் உயரத்திற்கு ஒரு பூச்செண்டு கொடுக்கலாம். வசீகரன், ரோபோவை கண்டுபிடித்து ஐஸ்சை வெளிநாடு சென்று கட்டிப்பிடித்து பாடிவிட்டு அவரைத் தவிர அனைவரிடமும் அடி வாங்கி கிளைமாக்ஸ்ஸில் மட்டும் போனால் போகிறது என ஏதோ உருப்படியாக செய்கிறார். உண்மையிலே படத்தின் ஹீரோ கண்டிப்பாகச் சிட்டி என்னும் ரோபோ ரஜினிதான். முழுப் படமும் சிட்டியின் ராஜாங்கம்தான். போலீசிடம் நக்கல், மாரியம்மன் தரிசனம், குழந்தையின் பிரசவம், ட்ரெயின் பைட், இயந்திரக் காதல், ஐஸ்ஸுடன் நடனம்  என கிடைத்த பால் எல்லாம் சிக்சுக்கு பறக்கிறது. பஞ்ச் டையலாக் தவிர ரஜினியின் அனைத்து திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் ஷங்கர். இரண்டாம் பாதியில் பரிமாணம் மாறும் போது ரஜினியின் உள்ளே இருக்கும்  இயல்பான வில்லன் சடாரென டாப் கியரில் நம்மை இழுத்துச் செல்கிறது. எத்தனை நாள் ஆச்சு இப்படி ஒரு ரஜினியைப் பார்த்து? குழந்தைகள் முதல் கிழவன் வரை அனைவரையும் கவருவான் சிட்டி.

இயந்திரத்திற்குக் காதல் வர வேண்டும் என்றால் கண்டிப்பாக அது ஒரு உலக அழகியாக இருக்க வேண்டும் என்பது ரஜினியின் பேரனுக்கே தெரியும். ஐஸ்வர்யா ராயைத் தவிர இந்த பாத்திரத்தில் வேறு யாரம் இவ்வளவு பாந்தமாக பொருந்தி இருக்க முடியாது. சில க்ளோஸ் அப் ஷாட்ஸ் தவிர இன்னும் அழகாகவே இருக்கிறார். அவருடைய நடனத்தின் நளினம், நமக்கு மெய்சிலிர்ப்பு. அவ்வளவு இயல்பாக ஏதோ வெந்நீர் சுட வைப்பது போல சுலபமாக ஆடிச் செல்கிறார். (ரஜினி அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்). ராவணனை ஒப்பிடும் போது இதில் இன்னும் அழகாகத் தமிழையும் நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிட்டி,  வசீகரனைக் கண்டுபிடிக்கும் காட்சி ஐஸின் நடிப்புக்கு 'பானை சோறு பதம்'.

இவ்வளவு பெரிய சயன்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கு நிச்சயம் அனிமட்ரானிக்ஸ், லைட் அண்ட் மாஜிக் போன்ற ஹாலிவுட் நிறுவனங்கள், பலமான அடித்தளம். படத்தின் முழுத் தரமும் இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. படம் நெடுக ஒரு இடம் விடாமல் மிரட்டி இருக்கிறார்கள். அதுவும் அந்தக் கடைசி 30 நிமிடத் திருப்பங்களும் கிளைமாக்ஸ் காட்சிகளும் நம் கண்களைத் திரையை விட்டு அகல விடுவதில்லை. இரண்டு ரஜினி வரும் எல்லா இடங்களாகட்டும், 1000 ரஜினி வரும் அரிமாவாகட்டும், எதிலும் துளிக் கூட கிராபிக்ஸ் என்பது கண்டுபிடிக்க முடியாத படி சிறப்பாக இருக்கிறது. இதற்காவே 'கொசுக் கார்ட்டூன்களையும்', கார் சேசிங்கில் சில ஓட்டைகளையும் மன்னிக்கலாம்.

சுஜாதா அவர்களின் கடைசிப் படம். சுஜாதா சில வருடங்கள் முன்பு கூறி இருந்தார் "தமிழ் சினிமாவில், நாட்கள் தள்ளிப் போனாலும் இரண்டு படங்கள் நிச்சயம் ஒரு நாள் எடுக்கப்படும். ஒன்று 'பொன்னியின் செல்வன்' இன்னொன்று 'ரோபோ' ". ஷங்கரும் கார்க்கியும் சொதப்பி இருந்தாலும் ஆங்காங்கே சுஜாதாவின் ஒரு வரி வைரங்கள் மின்னத் தவறவில்லை. உதாரணம் "கடவுள் இருக்கிறாரா?" என்கிற கேள்வி. ரோபோவிடம் மக்கள் கேட்கும் கேள்விகளை பாமரனுக்கும் புரிவது போல எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்திருக்கலாம். படத்தின் ஆதார ஐடியா சுஜாதாவினுடையது. ஆனால் அவருக்கு உரிய மரியாதை செய்ய ஷங்கர் தவறி விட்டார். டைட்டில் போடும் முன்பு ஒரு நன்றி அஞ்சலி தெரிவித்திருக்கலாம்.

கருணாசும் சந்தானமும் காமடி பண்ணும் போது யாரையாவது தியேட்டருக்கு அனுப்பி 'கிச்சு கிச்சு' மூட்டச் சொல்லலாம். சிட்டி, மொத்தச் சிரிப்புகும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள, இவர்கள் இருவரும் அதற்குத் தண்டனையாக சிட்டியிடமே செருப்படி வாங்குகிறார்கள்.

'இரும்பிலே ஒரு இதயம்' தவிர அனைத்துப் பாடல்களும் ஷங்கரின் பிரம்மாண்டத்தையும், புதிய இடங்களையும், ஐஸ்-ரஜினியின் அழகையும் அள்ளி வந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதுவும் 'காதல் அணுக்கள்' பாடல், தென்றலோடு வரும் ஐஸ்க்ரீம்.

ரஹ்மானின் பாடல்கள் பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. ஏற்கனவே அது உயரம் தொட்டு விட்டது. அவரின் பின்னணி இசை புதிய சிகரத்தை தொட்டிருக்கிறது. காட்சியும் இசையும்  ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு முந்துகிறது. கார் சேசிங்கில் வரும் இசையின்  புதிய ஸ்டைல், கிளை மாக்ஸ் சிம்பொனி என நமக்கு புதிய இசை அனுபவம். இன்னொரு முறை பார்க்கும் போதுதான் அதன் முழு வீரியமும் புரியும் என நினைக்கிறேன்.

ரத்னவேலு, சாபு சிரில், ஆண்டனி என அனைவரின் பங்களிப்பும் அபாரமானது.

படத்தில் எனக்குத் தெரிந்த சில சறுக்கல்களும் இருக்கின்றன.

1. முதல் பெரிய ஓட்டை: வில்லன். டானி டென்க்சாங்பா அட்சரம் சுத்தமாக ஹிந்தியில் பேசி இருக்கிறார். உதட்டசைவில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வார்த்தை கூட தமிழோடு பொருந்தி வரவில்லை. இதனாலேயே இவர் மனதில் ஓட்ட மறுக்கிறார். தமிழுக்கு மட்டுமாவது யாரவது நல்ல தமிழ் தெரிஞ்ச பெரிய நடிகரை உபயோகப் படுத்தி இருக்கலாம். ஷங்கரின் வழக்கமான perfectionக்கு ஒரு பேரிடி. எப்படி கோட்டை விட்டார் எனத் தெரிய வில்லை!! {தமிழுக்கு சத்யராஜ் இருந்திருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும்!!}
2. சாமானியனைச் சுற்றி விடும் அதிகப்படியான ஆங்கில டெக்னாலஜி வார்த்தைகள் (IP address, Worming-Deworming). இயன்றவரை தமிழ் படுத்தி இருக்கலாம். இல்லை புரியும் படி சிறிது மாற்றி எடுத்திருக்கலாம்.
3. இரண்டாம் பாதியின் முதல் 15 நிமிடங்கள். கொசுவும் கலாபவன் மணியும் வந்து மொக்கை போடுகிறார்கள். சாப்பிட்ட முந்திரிப்பருப்புக்கும் சிக்கன் வறுவலுக்குமாவது கொஞ்சம் ஷங்கர் யோசித்திருக்கலாம்.
4. வில்லன் ரஜினியின் காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.
5. விஞ்ஞானி ரஜினியின் மேக்கப்பில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஒட்டு தாடியும் மீசையும் திரையை நெருடுகிறது.

இவை எல்லாம் சிறிய விஷயங்களே. இவை அனைத்தையும் மறக்கும் அளவிற்கு படம் ஜோராய் நம்மை ஆட்கொள்கிறது.
எந்திரன், main stream ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் இருக்கலாம். ஆனால் மற்ற அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும் என எண்ணுகிறேன்.

எந்திரன் அனைவரையும் ஈர்க்கும் மந்திரன்! DONT MISS IT!

Wednesday, August 4, 2010

எந்திரன் - ஒரு இசைப் பார்வை


இப்படி ஒரு ஒரு மாஸ் இசை கேட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டது! இதோ வந்துவிட்டான் எந்திரன்! ராவணனில் ஏமாற்றம் அளித்த ரஹ்மான்-வைரமுத்து கூட்டணி, இம்முறை ரவுண்டு கட்டி கதகளி ஆடி இருக்கிறது. கூட சேர்ந்து வைரமுத்துவின் மகனும் (கார்க்கி), பா. விஜயும் பட்டாசு வெடித்திருக்கிறார்கள். ஷங்கர் படங்களில் என்றும் பாடல்கள் சோடை போவதில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் எந்திரன். "IF YOU HAVE HIGH EXPECTATIONS...MAKE IT SIMPLE" அப்படிங்கறது இந்த ஆல்பத்துக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். நிறைய மெனக்கெட்டு நிறைவாக கொடுத்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன். என்னதான் "ஹார்டு டிஸ்க், சிலிகான்" என்று ஆங்கிலத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஜல்லியை அடித்திருந்தாலும் தமிழில் உள்ள அறிவியல் வார்த்தைகளையும் பயன்படுத்தி இருப்பது  வரவேற்கத்தக்கது. இது போன்று மிகுந்த பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் உள்ளாகும் ஆல்பங்கள் பல கொசுவர்த்தி சுருள் போல வந்த வேகத்திலேயே சுருண்டிருக்கிறது. ஆனால் எந்திரன் வானளாவப் பறக்கிறான்...மேலும் பறப்பான்.

(எனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு கடைநிலை இசை ரசிகனின் பார்வையில் இருந்தே இதை எழுதுகிறேன். என் ரசனைக்கு கொஞ்சம் முரண் இருக்கலாம்)

புதிய மனிதா - SPB, Rahman, Katheeja Rahman - வைரமுத்து


ஒரு ரோபோ உருவாக்கத்தின் கடைசி கட்டப் பணிகளின் போது இப்பாடல் ஆரம்பிக்கும் போல உள்ளது. மெதுவாகக் குறைந்த இசையோடு ரஹ்மானின் சின்தசைஸ் குரலில் அறிமுகமாகிறது பாடல். கதீஜாவின் குரல் சில நொடிகளுக்கு பிறகு ஆரம்பித்து கவர்கிறது. மேலும் நம் பொறுமையை சோதிக்காமல் எஸ்பிபி வந்து பாடலைத் தடதடக்க வைக்கிறார். அவரின் குரல் உண்மையிலேய அவருக்கு இறைவன் கொடுத்த வரம். சில வரிகள் பாடினாலும் வெளுத்து வாங்குகிறார்
எஸ்பிபி. வைரமுத்து, "இப்படிப்பட்ட அறிவியல் பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறை" என்று கூறி இருந்தார். உண்மையே. இந்தப் படத்தில் அவர் எழுதியிருக்கும் எல்லாப் பாடல்களுக்கும் நிறைய உழைத்திருக்கிறார். தலைவர் சுஜாதா இருந்திருந்தால் இன்னும் நிறைய டிப்ஸ் கொடுத்திருப்பார். இந்தப் பாடலில் "தந்தை மொழி, கர்த்தா" என்கிற பதங்கள் கவர்கிறது.  ஒரு ஓபனிங் பாடலுக்கு இருக்கக் கூடிய அந்த ஒரு பஞ்ச் குறைகிறது. இருப்பினும் வசீகரமான முதல் பாடல்.

பூம் பூம் ரோபோ - Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah - கார்க்கி

வழக்கமான ராப்பில் அதிர்ந்து ஆரம்பிக்கும் பாடல். பழக்கமான "ஒரே மெட்டு" யோகி B யின் வார்த்தைகளில் கொஞ்சம் கம்பீரம் இழந்து, நடுவில் தடம் மாறி ஆங்காங்கே கலக்குகிறது. நடுவில் வரும் "சுட்டி சுட்டி ரோபோ"வில்  ஏற்கனவே கேட்ட சாயல். ஷங்கர் காட்சிகளில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

கிளிமஞ்சாரோ - Javed Ali, Chinmayi - பா. விஜய்

முதல் "PICK OF THE ALBUM". பழங்குடியினரின் மெட்டை அடிப்படையாக வைத்து இசை அமைத்திருக்கிறார் புயல். இருப்பினும் புதிய கள்ளாக இனிக்கிறது. இதுவே படத்தில் கடைசி டூயட் போல இருக்கிறது. கேட்டவுடன் மனதில் ஒட்டிக் கொள்கிறது பாடல். சில இடங்களில் எங்கோ கேட்ட பாடலை நினைவு படுத்தினாலும் இசையும் வார்த்தைகளும் அதை மறக்கச் செய்கின்றன. "அப்பப்போ...பின்னிகோடி" என்ற இடம் வரும்போதெல்லாம், பாடல் துள்ளல் நடை போடுகிறது. "ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா?" என்று வார்த்தைகளில் வலை வீசுகிறார் பா.விஜய். சின்மயியின் குழைவுக்கு முன் ஜாவேத் அலியின் குரல் சிறிது பின் தங்கியே ஒலிக்கிறது. ஜாவேத் அலிக்கு கொஞ்சம் "ழகர" ப் பயிற்சி கொடுத்திருக்கலாம் ரஹ்மான். பல இடங்களில் உச்சரிப்பில் தள்ளடுகிறார். சீக்கிரம் பல கவுண்ட் டவுனில் முதல் இடம் பெறப் போகும் பாடல்.


சிட்டி டான்ஸ் - Pradeep Vijay, Pravin Mani, Yogi B

படத்தின் கிட்டத்தட்ட தீம் பாடல் போல. நடுவில் பரதநாட்டிய ஸ்வரங்கள் வருகின்றன. சிட்டி ரோபோ எல்லா வகை நடனமும் ஆடுகிறது போல இருக்கிறது. முழுக்க ஸ்வரங்களாக இல்லாமல் அதை உடனே தடம் மாற்றி தீம் பீட் கொடுத்து மனதை அள்ளுகிறார். பார்க்கப்பட வேண்டிய பாடல்.

அரிமா அரிமா - Hariharan, Sadhana Sargam - வைரமுத்து

இரண்டாவது "PICK OF THE ALBUM" இது. ஒரு ஓபனிங் பாடலுக்கு இருக்க வேண்டிய பஞ்ச் இந்தப் பாடலில் இருக்கிறது. மகாராஜாவுக்குக் கட்டியம் கூறி வரவேற்பது போலத் தொடங்கும் பாடல், டூயட்டாகவும் மிளிர்வது ஆச்சர்யம். ட்ரம்ஸுடன் கோரஸ் "இவன் பெயரை..." என ஆரம்பிக்கும் போது., பாடலின் மாஸ் உங்களுக்குப் புரியும். இயந்திரம் காதல் செய்வது போல இருப்பதாலோ என்னவோ ஹரிஹரன் கொஞ்சம் கடுமையாகவே மிரட்டி இருக்கிறார். "அஃறிணையின் அரசன், காமுற்ற கணினி, சிலிகான் சிங்கம்" போன்ற புதிய வார்த்தைகள் வைரமுத்துவிற்கு "அட" போட வைக்கின்றன. Watch out for this song!

இரும்பிலே ஒரு இதயம் - A R Rahman, Kash 'N' Krissy - கார்க்கி

ராப்பில் ஜப்பானிய வார்த்தைகளுடன் (Arigatho Gozaimas - நன்றி என்று அர்த்தம்!) ஆரம்பிக்கும் பாடல் எடுத்தவுடனேயே டாப் கியரில் பறக்கிறது. பாடலின் டெம்போ எங்கும் குறைவது இல்லை. நடுவில் வரும் ஆங்கில ராப்..வழக்கமான ஒன்றே. சிறிது நேரமே வருவதால் தப்பிக்கிறது. பாடலின் உயிரோட்டம் ரஹ்மானின் குரலில் இருக்கிறது. ஷங்கர் மீதியை காட்சிகளில் நிரப்புவார் என்று எதிர்பார்கிறேன்.

காதல் அணுக்கள் - Vijay Prakash, Shreya Ghoshal - வைரமுத்து


மூன்றாவது "PICK OF THE ALBUM". இந்தப் பாடல் சில முறை கேட்ட பின்பே பிடிக்கும். "Lukka Chuppi" போல ஆரம்பிப்பதாகத்  தோன்றும் போதே...வேறு திசையில் இட்டுச் செல்கிறார் ரஹ்மான். விஜய் பிரகாஷ் என்பவர் ஆண் குரல். ஒரு அலட்சியம் கலந்த வசீகரம் இருக்கிறது இவர் குரலில். அதுவும் "oh..baby" பிட் வரும் போது இந்தப் பாடல் முழுமைத் தன்மையை அடைகிறது. என்றும் மெலடி பாடல்களே மனதிலும் காலத்திலும் நிற்கும். இந்தப் பாடலும் மக்கள் மனதில்  என்றும் நிற்கும்.


எங்கேயாவது சில இடங்களில் கொஞ்சம் நெருடினாலும், முழுமையாகப் பார்க்கும் போது வெற்றிக் கொ(கோ)டியை எட்டி விட்டார்கள். "ANOTHER FEATHER IN PUYAL'S CAP!"