பேராசிரியர் கல்கி ஒரு சிறுவனிடம்
கேட்டார்....”சுதேசமித்திரன் ஆபீஸ் எங்கே இருக்கிறது தெரியுமா?”
பையன் கூறுகிறான்...”ஓ..தெரியுமே!”
“எங்கே?”
“பிளாசா டாக்கீஸ்
பக்கத்தில்...”
அடுத்த வினாடி ‘பளார்’ என அறை விழுந்தது
பையனுக்கு.
திருதிருவென விழித்த சிறுவனைப்
பார்த்து...“பிளாசா டாக்கீசை வைத்து சுதேசமித்திரன் காரியாலயத்தை
அடையாளம் காட்டுகிறான்...தடிப்பயல்!!” என்று நொந்து கொண்டார்
கல்கி.
:::தெரியாதவர்களுக்கு:- சுதேசமித்திரன் என்பது பாரதத்தின்
சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முக்கிய நாளிதழ்:::
இன்று இதைப் படித்தவுடன்
நினைத்துப் பார்க்கிறேன்....
பிற்காலத்தில்
(நிகழ்காலத்திலும்தான்) என்றாவது ஒரு ஆசிரியர் மாணவனிடம்
“பாரதியின் பிறந்த தினம்
தெரியுமா?” எனக்
கேட்க,
பையன் “ஓ...தெரியுமே...ரஜினியின்
பிறந்த தினத்திற்கு முந்திய தினம்...!!” என்று கூற,
ஆசிரியர் “வெரி குட்....ப்ரௌட்
ஆஃப் யு!” என்று கூறினால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பெரிய நகரங்களில்
படிக்கும் மாணவர்கள், தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கு பயணம் செய்யும் பொழுது, பெயர் பலகைகளில்
இருக்கும் மூன்றெழுத்து மதுரையைப் படிக்க முழுதாய் மூன்று நிமிடம் ஆகிறது
(சென்னையில் இந்த பிரச்சனை இல்லை, இரு மொழிகளிலும் எழுதி
இருப்பதால்!). மொழியைக் கற்காததின் காரணமாகவே, அவர்கள் பல அனுபவங்களை, தம்மை அறியாமலே
இழக்கிறார்கள். இன்று நாம் உபயோகப் படுத்தும் சில வார்த்தைகள் தமிழ் இல்லை என்று
சொல்லி மாற்றி அமைத்தால், அடிக்க வர ஒரு பெரும்
கும்பலே இருக்கிறது. உதாரணத்திற்கு சில: சைக்கிள், செயின், பஸ், கண்டக்டர், ஓகே, காஸ், பெட்ரோல், நியூஸ்பேப்பர், ஆட்டோ....மேலும்
கூறலாம். இவை எண்ணில் அடங்கா. இனி என்றும், இந்த வார்த்தைகளுக்கான
தமிழ் வடிவத்தை பேச்சு வழக்கில் காணவே முடியாது. இப்படியே, நம் கண்களுக்குத்
தெரியாமலேயே, நம்மை, நம் மொழியை, நாமே செல்லரித்துக்
கொண்டிருக்கிறோம். நாமும் தமிழைப் பேசாமல், நமது குழந்தைகளுக்கும்
கற்பிக்காமல், பேசுபவரையும் உதாசீனப்படுத்தும் போக்கு அபாயகரமானது.
அப்படியாவது ஒழுங்காக ஆங்கிலம் பேசுகிறோமா என்றால், அதுவும் இல்லை.
கொச்சையான ஆங்கிலத்தில் உரையாடி, நம்மை நாமே மேதைகள்
என்று புகழ்ந்து கொள்வது அறிவீனத்தின் உச்சம். இரண்டு வட இந்தியர்கள் சந்தித்தால்
ஹிந்தியில் மட்டுமே உரையாடுகிறார்கள். தெலுங்கர்களும், மலையாளிகளும்
சந்தித்தால் ஆங்கிலத்தில் உரையாடுவதில்லை. அதற்காக, அவர்கள் அனைவரும்
முழுமையாக தங்கள் மொழியை அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், பெரும்பான்மையான
விழுக்காடே இங்கே பேசுபொருள். ஆங்கிலத்தில் பேசினால்தான் நம்மை அறிவாளிகளாக
மதிப்பார்கள் என்ற பொய்யான பிம்பமே தமிழ் தெரிந்தவர்களையும் ஆங்கிலத்தில் பேச
வைக்கிறது. ஜப்பானியர்களுக்கும் ஆங்கிலம் தெரியும். அனால் ஜப்பான் தெருவில்
செல்லும் ஒருவரை நிறுத்தி ஆங்கிலத்தில் வழி கேட்டால், பெரும்பாலும் அவர்
பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டு ஓடிவிட வாய்ப்புண்டு. எங்கே ஆங்கிலத்தில் பேசினால்
தவறாகி விடுமோ என்ற பயமே அவரை ஓடச் செய்கிறது. இங்கே நிலைமை தலை கீழாய்
இருக்கிறது. தமிழில் பேசினால் எங்கே தவறாகி விடுமோ என அஞ்சி சிலர் கற்பிழந்த
ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
சில தினங்கள் முன்பு
நூலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு புத்தகத் தேடல் சம்பந்தமாக நூலக மேலாளரை அணுகி, முதலில் சந்தேகத்தோடே ஆங்கிலத்தில்
என் கேள்வியைக் கேட்டேன். அவரின் தோற்றமும் பதிலின் தரமும் அவர் தமிழ் என்பதை
பறைசாற்றின. “நீங்க தமிழா?” என்று கேட்டேன். “எஸ்!” என பதில் வந்தது. சரி, பின்னால் வரும்
பதில்கள் தமிழில் வரும் என எண்ணி, என் அடுத்த கேள்விகளை
தமிழில் கேட்க, அவர் கடைசி வரை மறந்தும் தமிழில் பதில் சொல்லவில்லை.
இத்தனைக்கும் என் கேள்வியும் தமிழ் புத்தகத்தைப் பற்றியே! அவர் பதில் சொல்லாததற்கு
காரணம், தமிழ் சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதுவாக இருக்க
வாய்ப்பில்லை என்பது அவரின் தெளிவான பதிலில் (புரிதலில்) இருந்து தெரிந்தது. அப்படி ஒன்றும் அவர் நல்ல
ஆங்கிலம் பேசி விடவில்லை. பிறகு எதற்கு இந்த போலி கெளரவம்?
ஆங்கில மோகத்திற்கு
அதன் நாசூக்கும் ஒரு போலி வசீகரத்தை உண்டாகுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்து “தண்ணி அடிக்கப் போலாமா?” என்று கேட்டால், உங்களுக்கு சுற்றி
இருக்கும் திடீர் ஹீரோக்களிடம் தர்ம அடியும், இலவச இணைப்பாகப் புழல் களியும்
நிச்சயம். இதையே ஆங்கிலத்தில் “காபி குடிக்கலாமா?” என்பது போல “ஷேல் வி கோ ஃபார் பஃப் (pub) டூநைட்?” என்று நாகரிகமாக (!!?) கேட்டு விட முடிகிறது, அல்லது நாகரீகமாக
கேட்பதாக நம்பப்படுகிறது. இதற்கு மறுமொழியாக செல்லமாக அந்தப் பெண்ணிடம் இருந்து
அடி கூடக் கிடைக்கலாம்!! இன்று பெரு நகரங்களின் ஐ.டி அலுவகலங்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் குடிப் பழக்கம் பெருகி வருவதாய் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்காக ஆங்கிலம் பேசுவதால்தான் அவர்கள் பழக்கப்படுகிரார்கள் என்று கூறவில்லை. மொழி மாறும் பொழுது தீயவை கூட நல்ல தோல் போர்த்திக் கொள்கிறது. “மலம்” என்று சொல்லும் போதே
நமக்கு நாகூசுகிறது. ஆனால் அனைவரும் “shit” என்பதை எந்தக்
கூச்சமும் இன்றி பலமுறை பிரயோகிக்கிறோம்.
மொழி என்பது வெறும் ஊடகம் “Afterall, language is a medium to communicate” என்று கூறி மழுப்பும்
ஆட்கள் உண்டு. அவர்களுக்கு நாஞ்சில் நாடனின் கேள்வியை மேற்கோளாக்குகிறேன். “தாய் என்பவள் வெறும் Carrier மாத்திரமா?
தண்ணீர் என்பது வெறும் drink மாத்திரமா?”. மொழி என்பது உயிர்களின் நீராதாரம் போன்றது.
விசும்பின்துளி வீழின் அல்லால்
மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்பு அரிது
பசும்புல்லின் தலை மட்டுமல்ல, மனிதன் உட்பட அனைத்து
உயிர்களின் தலையும் இதில் அடங்கும். அது போலவே மொழியும். “தமிழ் எங்கள்
பேச்சு, மூச்சு, உயிர்” என
அரசியல்வாதிகள் போல ஜல்லி அடிக்காமல் “ஏன் தமிழில் உரையாட
வேண்டும்” என்று அறிவுப்பூர்வமாகப் பார்க்க வேண்டும். மனிதனின் தலைசிறந்த
கண்டுபிடிப்பு மொழி. கடவுளுக்கு முன்பே தோன்றி விட்டது! மொழி என்பது நம்மை, நம்
வரலாரற்றை, தொன்மையை, பண்பாட்டை அறிய முதன்மையான வழி. தாய் மொழியை சரியாகப் பயிலாதவன் எம்மொழியையும்
உருப்படியாகப் பயில இயலாது என்பது பலமுறை அரங்கேறி வரும் நிதர்சனம். மொழி என்பது
ஒரு இனத்தின் அடையாளம். மொழி அழியும் பொழுது இனமே அழிந்த உண்மைகள் வரலாற்றில்
சிதறிக் கிடக்கிறது. ஜப்பானிய மொழி பேசுவதால்தான் அவர்கள் ஜப்பானியர்கள் என
அழைக்கப் படுகிறார்கள். பிரெஞ்சுகாரர்கள் என பெயர் சூட்டு விழா நடத்தி விட்டு
யாரும் பிரெஞ்சு மொழி பேசுவதில்லை. மதமோ, ஜாதியோ மக்களை முதலில் பிரிக்கவில்லை.
மொழியால் மட்டுமே ஒரு நாடோ, மக்களோ, இனமோ தனித்துவம் பெறுகிறது. பிறகு வந்ததே மதம்.
ஒருவரின் பெயரைப் போன்று அடையாளம் தருவது மொழி. பெயரை இழந்து விட்டு நம்மில் ஒருவர்
வாழ்ந்து விட முடியுமா?
ஹாய் மதனில் ஒரு கேள்வி.
”உலகிலேயே சுலபான மொழி எது?” பதில், “தாய்மொழி!” என்று கூறியிருந்தார். சற்றே
சிந்தித்து பாருங்கள், நீங்கள் கஷ்டம் என
நினைக்கும் மொழியை, ஒரு சிறுமி அனாயாசமாகப் பேசுகிறாள், அது அவளின் தாய்
மொழியாக இருப்பதால். தாய் மொழியில் பேசும், சிந்திக்கும் குழந்தையின் மூளை மற்றும்
மன வளர்ச்சி அந்த மொழியில் பேசாத குழந்தையை விட அதிகமாக இருப்பதை விஞ்ஞானம்
நிரூபிக்கிறது. ஒரு மனிதனின் குணம், ஆளுமை, திறமை, நிறை, குறைகளை நிர்ணயிப்பதில்
மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தாய் மொழி ஒரு குழந்தையை அதன் குடும்பம், பண்பாடு,
வரலாறு, மதம், சமூகம் என அனைத்தோடும் ஒரு கோடு போல் இணைக்கிறது.
“ஒரு மனிதனுக்கு புரியும்
மொழியில் பேசினால் அது அவனின் மூளையை சென்றடையும். அவரின் தாய் மொழியில் பேசினால்
அது அவரின் இதயத்தை சென்றடையும்” என்றார் நெல்சன் மண்டேலா. நாம் நம் சந்தததியை
மனிதத்தன்மையோடு பார்க்க ஆசைப்படுகிறோமா அல்லது மூளைத்தனத்தோடா?
இதற்கான மாற்றங்கள் வீட்டிலிருந்தும்
பள்ளியிலும் தொடங்க வேண்டும்.
- வீட்டில் பேசுமொழி தமிழாக இருக்க வேண்டும்
- எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் என்பது ஒரு கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்
- தமிழில் வாசிப்பு பழக்கம் மிக முக்கியமானது. வாசிப்பே ஒருவரின் சொல்வளத்தைப் பெருக்கும். மேலும், மொழியைப் பற்றிப் பெருமைப்படவும், மொழியின் வேறு பரிமாணங்களை அறிவதற்குமான தூண்டுகோலாக அமையும்.
வீட்டில், ஆங்கில
நாளிதழோடு, தமிழ் செய்தித்தாளும், வார இதழ்களும் வாங்க வேண்டும். வாசிப்பு பழக்கம்
தினத்தந்தி, சிறுவர்மலரில் இருந்து தொடங்குகிறது. வாரமலர், குமுதம், விகடன்,
நாவல், கவிதை, இலக்கியம் என வாசிப்பு உங்களை அடுத்தடுத்த தளங்களுக்கு தானாகவே இழுத்துச்
செல்லும். வாரப் பத்திரிகைகள் படித்தல் பெரும் பாவம் போலவும், படிப்பவர்கள்
கெட்டுப் போய் விடுவார்கள் என்பது கட்டுக்கதை. அப்படி சொல்பவர்கள் அனைவரும் தங்கள்
சிறு வயதில் அதை விட மோசமான புத்தகங்களை படித்திருப்பார்கள்! வார இதழ்கள்,
செய்தித்தாள்கள், படிக்கும் போதுதான் நல்ல
புத்தகங்களுக்கான தேடல் அதிகமாகும். மொழி கடந்த நல்ல தேடல்களுக்கும் வழி
வகுக்கும்
- ஆங்கில ரைம்ஸ், ஆங்கிலக் கதைகளோடு தமிழ் பாடல்கள், தமிழ் கதைகளைப் குழந்தைகளோடு பகிர வேண்டும்
- தினம் பத்து நிமிடம் தமிழில் படிக்க ஊக்குவிக்க வேண்டும்
- எளிதான குறள், பாசுரம் இவற்றை நல்ல கதைகளோடு சொல்ல வேண்டும்
- ஓரளவு விவரம் தெரியும் வயதில் மாதம் ஒருமுறையாவது நூலகம் அழைத்து செல்ல வேண்டும்
- மேற்சொன்ன அனைத்தையும் வீட்டிலுள்ள பெரியோர்களும் பின்பற்ற வேண்டும்
கைப்புண்ணிற்கு கண்ணாடி எதற்கு? புண்ணும் அதற்கான மருந்தும்
நம்மிடமே இருக்கிறது.
