Wednesday, December 30, 2009

எதை எழுதுவது முதலில்?

இந்த பதிவை எப்படி ஆரம்பிப்பது என்று ரொம்ப நேரமாக யோசித்தும் எதுவும் தோன்றாததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. என்ன தலைப்பு வைக்கலாம்? எப்படி பக்கத்தை டிசைன் செய்யலாம்? என்ன ஃபான்ட்? என்ன லோகோ? இப்படியே கொஞ்ச காலமாக சிந்தித்ததில் 365 நாட்கள் கடந்து விட்டன! (இதற்கு முன்னாடி ஒரு கத்துகுட்டி ப்ளாக் ஆரம்பித்து அதோட பாஸ்வோர்ட் கூட மறந்து போன விஷயம் ரகசியம்! “இப்போ மட்டும் நீ கத்துகுட்டி இல்லையானு" கேப்பிங்களே. சரி விடுங்க. தமிழனோட குணம் அது!:-) எப்படியாவது இந்த புது வருஷத்தில் இந்த ப்ளாகை ஆரம்பித்து விட வேண்டும் என்று இதோ ஆரம்பித்து விட்டேன்.

 “எழுவதற்கு முன்பு நிறைய படியுங்கள். எங்கோ இருக்கும் பெங்களூரின் சந்துகளில் நடப்பதை பற்றி எழுத வேண்டாம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில், உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை முதலில் எழுதுங்கள். அதில்தான் உங்களுக்கு எல்லா தகவல்களும் நுணுக்கமான விஷயங்களும் தெரிந்திருக்கும்” என்று எங்கள் தலைவர் சுஜாதா(சுஜாதாதா!) சொல்லி இருக்கிறார். எழுதுவற்கும் படிப்பதற்கும் ஒரு மிகப் பெரிய தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் அவரே. அவரின் எழுத்து இல்லாவிட்டால் பல எழுத்தாளர்கள் உருவாகி இருக்க மாட்டார்கள். (பாத்திங்களா, இப்போவே சுயதம்பட்டம் ஆரம்பிச்சாச்சு!)  அவரைப் பற்றி மேலும் சொல்வது ‘உள்ளங்கை நெல்லிக் கனி’ போல். அவரால் உருவான ஏராளமான விதைகளில் ஒரு சிறு விதை நான் என்பதில் பெறற்கரிய பேறு பெறுகிறேன். அவர் சொன்ன வழியே எனக்கு தெரிந்ததை என் அனுபவங்களை பார்த்தததை, ரசித்ததை, கேட்டதை, படித்ததை பகிரலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

நாகேஷ், “காதலிக்க நேரமில்லை” படத்தில் சச்சுவிடம் சொல்லுவார், “இங்க பாரு, நான் எடுக்கறதுதான் படம், நீ நடிக்கறதுதான் நடிப்பு, இத ஜனங்க பாத்து தீரணும். அது அவங்க தலையெழுத்து” ன்னு. அதுதான் எனக்கு ஞாபகம் வருது இந்த பதிவை ஆரம்பிக்கும் போது!