'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு'
விமர்சிக்கப் போகிறவரைப் பற்றியே வாழ்த்து பாடி ஆரம்பிக்கிறேன்!
இவரைப் பற்றி எழுதணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. கடவுளைப் பற்றிய என் புரிதலையும் நிலையையும் சந்தேகத்தையும் அனுபவத்தையும் மற்றவர்கள் சொன்னது, கேட்டது, படித்தது, சரடு விட்டது என அனைத்தையும் ஒரு சின்ன தொடராக பதிவிடலம்னு நினைச்சேன். (யாரு படிக்கறாங்க?ஹி..ஹி..) சந்தேகத்தின் அடிவாரத்தில் இருக்கும்போதுதான் தேடலின் வேகம் இன்னும் அதிகமாகிறது. இதோ ஒரு சின்ன தேடல்.
அம்மாவுக்கு உடம்பு
குணமாக நோன்பிருந்து,
தேர்வில் பாஸ் ஆக
முடி காணிக்கை தர
நேர்ந்து கொண்டு,
தங்கைக்கு நல்ல வரன்
நிச்சயமாக கால்நடையாய்
மலை ஏற பிரார்த்தித்து,
காதலி காதல் சொன்னால்
நூற்றியெட்டு முறை வலம்
வருவதாய் வாக்களித்து,
வாழ்க்கை முழுதும்
தொடர்ந்து கொண்டிருக்கும்
வேண்டுதல்கள்,
ஒன்று விடாமல் அனைத்தும்
நிறைவேறினாலும்,
மனதில் நெருடும்
அந்தக் கேள்வி...
உண்மையிலேயே இருக்கிறாரா கடவுள்?!
இது நான் எழுதிய கவிதை! (மன்னிச்சுட்டு மேல படிங்க:-) இந்த நிலை அல்லது கேள்வி, பகுத்தறிவுள்ள எல்லோருக்கும் வரும். நான் கண்மூடித்தனமாகக் கடவுளை நம்புகிறவர்களை இங்கு குறிப்பிடவில்லை. சில பேர் இந்த கவிதையை படித்துவிட்டு 'யார்ரா இவன்?' என்ற தோரணையில் பார்ப்பார்கள். அவர்களும் விமர்சனத்தில் இல்ல. நமக்கு புரியாத விஷயங்கள் இந்த உலகத்துல, நம்மள சுத்தி நடக்குதே, இதுல எதை நம்பறது? எதை விடறது? இதுக்கெல்லாம் யாரு காரணம்? கடவுளா? இல்லை அவருக்கும் அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்க முடியுமா? அப்படி இருந்தா எங்க இருக்கு? அது ஒரு சக்தியா இல்ல இல்ல பலவா? ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு சக்தி இருக்கா? இல்ல அப்படி ஒண்ணுமே இல்லையா? எது உண்மை போல் இருக்கும் பொய்? எது பொய்யாக நம்பப்படும் உண்மை? என்று எல்லா கேள்விகளையும் கேட்டுவிட்டு திரும்பவும் அடுத்த பிரதோஷதுக்கு கோவிலுக்கு போகிறவர்களைப் பற்றியே கூற வருகிறேன். நமக்கு ஏன் இந்த 'quandary' ஆன ஒரு நிலை?
நம்மை மீறிய, நாம் வணங்கக்கூடிய ஒரு சக்தி இருக்கிறதென்று நம்பி கோவிலுக்கு போகிறோம். கோவிலுக்குள் இருக்கும் வரையில் பெரும்பாலும் கேள்விகள் வருவதில்லை. வெளியே வந்தவுடன் நிதர்சன உலகத்தில் நிலவும் ஏழ்மை, துன்பம், தீவிரவாதம், அரசியல் இவற்றை பார்க்கும் பொழுது, கொஞ்சம் நம்பிக்கை குறைகிறது. நாம் வேண்டிக் கொண்டு வந்தது அடுத்த நாள் அல்லது அந்த மாதத்திற்குள் நடக்கவில்லை என்றால் கொஞ்சம் சந்தேகம் வருகிறது.
அடுத்த வாரம் எல்லாத்தையும் புரட்டிப் போடறாப்புல லாட்டரில பணம் வந்ததும் 'கடவுள் கண்ணத் தொரந்துட்டார்'னு ஜல்லி அடிக்கறது. இதை வெளியில் இருந்து பார்த்தால் நமக்குள்ளேயே ஒரு ஒழுங்கின்மை தெரியுது. முழுக்க நம்ப விடாம நம்ம பகுத்தறிவு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கு. ரெண்டையும் சமமா வைக்க முடியாம அல்லாடறோம். இதுல எது நிஜம்? எது பிம்பம்?
சுஜாதாவின் 'கடவுள் இருக்கிறாரா?' என்ற புத்தகத்தின் முடிவில் "கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று என்னைக் கேட்கிறீர்களா? It depends!" என்று முடித்திருப்பார். சிலர் நம்புவதை விரும்புகிறார்கள். சிலர் பரிபூர்ணமாக நம்புகிறார்கள். சிலர் பயந்து நம்புகிறார்கள். சிலர் சந்தேகத்தோடு 'நம்பித்தான் வைப்போமே எல்லாரும் நம்பறாங்க..நம்ம என்ன கெட்டா போய்ட்டோம்' னு நம்புகிறார்கள். சிலர் மூளைச் சலவை செய்யப்பட்டு நம்ப வைக்கப் படுகிறார்கள். சிலர் நம்பாதது போல் நடிக்கிறார்கள். மீதி இருப்பவர்கள் நம்புவதே இல்லை. நாம் நம்புகிறோமா? இல்லையா?
ஐன்ஸ்டீன் கடவுளைப் பற்றி..
"WHAT I SEE IN NATURE IS A MAGNIFICENT STRUCTURE THAT WE CAN COMPREHEND ONLY VERY IMPERFECTLY, AND THAT MUST FILL A THINKING PERSON WITH A FEELING OF "HUMILITY." THIS IS A GENUINELY RELIGIOUS FEELING THAT HAS NOTHING TO DO WITH MYSTICISM."
அடுத்ததில் இதைப் பற்றி பார்ப்போம்.

No comments:
Post a Comment